குன்றத்தூர் ஒன்றியம் சோமங்கலம் பகுதியில் டாக்டர் இல்லாமல் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

ஸ்ரீபெரும்புதூர், ஜூலை 19: குன்றத்தூர் ஒன்றியம் சோமங்கலம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் டாக்டர் இல்லாமல் செயல்படுகிறது. இதனால், சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
குன்றத்தூர் ஒன்றியம் சோமங்கலம் பகுதியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு சோமங்கலம், நடுவீரப்பட்டு, அமரம்பேடு, பூந்தண்டலம், பழந்தண்டலம், எருமையூர், வரதராஜபுரம், தர்காஸ் உள்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பிரசவம், மகப்பேறு கால சிகிச்சைகள், பல்வேறு பரிசோதனை மற்றும் காய்ச்சல் உள்பட பல்வேறு சிகிச்சைகளுக்கு தினமும் 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.சோமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி உள்ள பெரும்பாலான கிராமங்களில் போதிய பஸ் வசதி இல்லை. இதனால் அவசர சிகிச்சை, குழந்தை பிரசவத்திற்கு இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை நாடுகின்றனர்.

இங்கு கடந்த சில நாட்களாக, டாக்டர் சரிவர பணிக்கு வருவதில்லை என பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோயாளிகள், சிகிச்சை பெற முடியாமல் கடும் சிரமம் அடைகின்றனர்.
சோமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், டாக்டர் வராததால், நோயாளிகளுக்கு செவிலியர்களே சிகிச்சை அளிக்கின்றனர். மேலும் காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது.இதையொட்டி, தினமும் நோயாளிகளின் உறவினர்களுக்கும், செவிலியர்களுக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்படுகிறது. இதனால் சித்தா பிரிவு டாக்டர், அலோபதி சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு, பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து, பொதுமக்கள் சார்பில் பலமுறை போராட்டங்களும் நடந்துள்ளன.
 எனவே சோமங்கலம் போன்ற ஆரம்ப சுகாதார  நிலையங்களில் டாக்டர்கயை நியமித்து உரிய நடவடிக்கை எடுக்க சுகாதார துறை  அதிகாரிகள் முன் வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பாக்ஸ்வேறு மருத்துவமனைக்கு அனுப்பும் ஊழியர்கள்
தற்போது, சோமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகளிடம், இங்கு மருத்துவர் இல்லை, வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுகொள்ளவும் என சுகாதார நிலைய ஊழியர்கள் கூறி அனுப்புகின்றனர்.
கிராம புறங்களில் அவசர சிகிச்சைக்கு ஏற்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவல நிலை மாவட்டம் முழுவதும் உள்ளது. படவிளக்கம் டாக்டர் இல்லாமல் செயல்படும் சோமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.

Tags :
× RELATED அச்சிறுப்பாக்கம் அரசு பள்ளியில் மாணவர் காவல்படை துவக்கம்