×

திருக்கழுக்குன்றம் ஒன்றியம் வழுவதூர் ஊராட்சியில் குடிநீர் கேட்டு குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

திருக்கழுக்குன்றம், ஜூலை 19: திருக்கழுக்குன்றம் ஒன்றியம், வழுவதூர் ஊராட்சியில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம், வழுவதூர் ஊராட்சியில் வழுவதூர், திம்மூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு, 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள மக்களுக்கு, கடந்த ஒரு வாரமாக குடிநீர் சரிவர வினியோகம் செய்யவில்லை. இதனால், பல கிமீ தூரம் சென்று, தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்தினர். இதையொட்டி கடும் சிரமம் அடைந்தனர். குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், முறையாக குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து, வழுவதூர் ஊராட்சியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மக்கள், நேற்று காலை மதுராந்தகம் - திருக்கழுக்குன்றம் சாலையில் காலி குடங்களுடன் திரண்டனர். அங்கு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து திருக்கழுக்குன்றம் எஸ்ஐ அசோக் சக்ரவர்த்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அங்கு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உடனடியாக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதை ஏற்று மக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் போராட்டத்தால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பரபரப்பு நிலவியது.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிப்போம் என தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு