×

சென்னை புறநகரில் உள்ள ஊராட்சிகளில் சாலை அமைக்க - குப்பைகளை அகற்ற போதிய நிதியை ஒதுக்க வேண்டும்

காஞ்சிபுரம், ஜூலை 19: சென்னை புறநகரில் உள்ள ஊராட்சிகளில் போதிய நிதி ஆதாரம் இல்லாததால் பழுதடைந்து உள்ள சாலைகளை சீரமைப்பதற்கும், குப்பைகளை அகற்வதற்கும் அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ வலியுறுத்தினார்.பேரவையில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-தா.மோ.அன்பரசன் :- ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட கெருகம்பாக்கம் - கவுல்பஜார் இடையே அடையாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டுகின்ற பணி ₹ 5 கோடியே 20 லட்சத்தில் நடக்கிறது. அப்பணி 60 சதவிகிதம் முடிந்துள்ளது.மேலும் இந்தப் பணியை வரும் மழை காலத்துக்குள் விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அதேபோன்று கவுல்பஜாரில் இருந்து வெளியில் செல்லும் ஒன்றியச் சாலை மிகவும் பாழடைந்த நிலையில் இருக்கிறது. அந்தச் சாலையையும் விரைந்து சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக் கொண்டு வர வேண்டும்.

உள்ளாட்சித் துறை அமைச்சர் :- காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குன்றத்தூர் ஊராட்சி, கெருகம்பாக்கம் கிராம ஊராட்சி, அடையாறு ஆற்றின் குறுக்கே ₹5 கோடியே 93 லட்சத்தில் 122.84 மீட்டர் நீளமுள்ள உயர்மட்டப் பாலம் நபார்டு திட்டத்தின் கீழ் 14.6.2018-ல் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேற்கொண்டு இந்த உயர்மட்டப் பாலத்துக்கு இணைப்பு சாலைகள் அமைக்கும் பணிகள் ₹21 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டிலும், பாலத்துக்கான தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் ₹2 கோடியே 28 லட்சம் மதிப்பீட்டிலும் நடக்கின்றன. இந்த உயர்மட்டப் பாலம், இருபுற தடுப்புச் சுவர் மற்றும் இணைப்புச் சாலை ஆகியவை அமைக்க நபார்டு திட்டம் மற்றும் மாநில நிதி ஆதாரங்கள் மூலம் மொத்தம் ₹8 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடக்கின்றன. இந்தப் பாலப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இருபுற தடுப்புச் சுவர் மற்றும் இணைப்புச் சாலைப் பணிகள் அனைத்தும் 30.11.2019-குள் முழுமையாக முடிக்கப்படும்.

மேலும் ஒன்றியச் சாலைகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு அவசியம் இருப்பின் கண்டிப்பாக அது செய்து தரப்படும். தா.மோ.அன்பரசன் :- சென்னை புறநகர் பகுதிகளில் இருக்கும் பல ஊராட்சிகளில் போதிய நிதி ஆதாரம், வருவாய் இல்லாத பஞ்சாயத்துகளில் மின் இணைப்புக்குக்கூட பணம் கட்ட முடியாமல், அங்கே பணியாற்றக்கூடிய பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் பஞ்சாயத்துக்கள் அதிகமாக உள்ளன. அந்த ஊராட்சிகளில் சாலைகள் போடாமல் இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலைகள் இன்றைக்கு பாழடைந்துள்ளன. 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு சிமென்ட் சாலை போட்டார்கள். இன்றைக்கு அந்த சிமென்ட் சாலைகளில், கற்கள் எல்லாம் பெயர்ந்து நடக்க முடியாத நிலை உள்ளது. எனவே அந்த சாலைகளை போடுவதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும், அதோடு மட்டுமல்லாமல் சென்னை புறநகர் பகுதியிலே, மக்கள் தொகை அதிகரித்ததன் காரணமாக குப்பை அதிகமாக சேருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த பணியாளர்கள் தான் இன்றும் இருக்கிறார்கள். அதற்கு வேண்டிய வாகனங்கள் இல்லை.

எனவே இந்த அரசு தயவு செய்து அந்த ஊராட்சிகளையெல்லாம் ஆய்வு செய்து, போதிய வண்டி வாகனங்கள், தேவையான பணியாளர்களை நியமனம் செய்து இந்தக் குப்பை பிரச்னைக்கு முடிவு கட்ட வேண்டும். உள்ளாட்சித் துறை அமைச்சர் :- ஊராட்சிகளில் சம்பளம் வழங்கப்படாமல் இருக்கிறது என்பது போன்று சூழ்நிலை இல்லை. இருந்தாலும் கூட தேவையான நிதியை ஒதுக்கியிருக்கிறோம். அதே போல சாலை அமைப்பதற்கு கிராம சாலையை பொருத்தளவிற்கு இதற்கு முன்பு மொத்தமாக 1,02,000 தான் இருந்தது. 47,000 ஊராட்சி சாலைகள் கூடுதலாக சேர்த்து இருக்கிறோம்.நீங்கள் சொல்வது குறுகலான ஒரு கிலோ மீட்டருக்குள் இருக்கும் சின்ன சாலைகளைப் பற்றி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அதுவும் கூட கடந்த முறை ₹200 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறோம். இந்தத் தடவையும் கூடுதலாக நீங்கள் சொன்ன சாலைகள், ஊராட்சி சாலைகள், அந்த ஒரு கிலோ மீட்டருக்குள் இருக்கும் சாலை தான் இன்னும் அமைக்கப்படாமல் கொஞ்சம் சிரமமாக இருந்தது. அதையும் கூட நாம் எடுத்து இருக்கிறோம்.

திடக் கழிவு மேலாண்மையைப் பொருத்தளவிற்கு ஒரு நாளைக்கு தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கு பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி, மாநகராட்சி எல்லாவற்றையும் சேர்த்தல் கிட்டத்தட்ட 19,000 டன்னுக்கு மேல் குப்பைகள் சேகரமாகிறது. இது பெரிய சவாலான பணி. இருந்தாலும் கூட இந்த அரசு இன்றைக்கு அதிகமான நிதிகள் ஊராட்சிகளுக்கு ஒதுக்கி, தேவையான உபகரணங்களை வாங்கியிருக்கிறது. கண்டிப்பாக எங்கே அந்த மாதிரி இருந்தாலும் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Tags :
× RELATED இடைத்தரகர்களால் சிதையும்...