×

கத்தரிப்பூ வண்ண பட்டு உடுத்திய அத்தி வரதர்

காஞ்சிபுரம், ஜூலை 19: கத்தரிப்பூ வண்ண பட்டு உடுத்திய அத்தி வரதர், நேற்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். அவரை, நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் வைபவம் கடந்த 1 ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 17ம் தேதிவரை 48 நாட்கள் நடக்கிறது. முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும், அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் ஆர்வத்துடன் அத்தி வரதரை தரிசனம் செய்கின்றனர். அத்தி வரதரை தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகத்தால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று பெருமாள் அவதரித்த நட்சத்திரமான திருவோணம் என்பதால், காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி, நேற்று அத்தி வரதர் கத்தரிப்பூ வண்ண  பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிலையில் பகல் 1 மணியளவில் நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டவர்கள் 4 பேர் உயிரிழந்ததால் கோயில் நடை சாத்தப்படும் என செய்தி பரவியது.
ஆனால் கோயில் கோபுர வாசலுக்கு வெளியில் இச்சம்பவம் நடைபெற்றதால் கோயில் நடை சாத்தப்படாமல் தொடர்ந்து வழக்கம்போல அத்தி வரதர் தரிசனம் நடந்தது. நேற்று, தொழிலதிபர் ஏ.சி.முத்தையா, நடிகர் பாண்டியராஜன் குடும்பத்தினர், ஜெ.தீபா கணவர் மாதவன் உள்பட முக்கிய பிரமுகர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...