×

ஒடிஷா சிறுமி கொலை வழக்கில் திருப்பம் சிக்கன் பக்கோடா கேட்டதால் கொன்றேன்

திருவள்ளூர், ஜூலை 19: திருவள்ளூர் அருகே ஹாலோபிளாக் தொழிற்சாலையில், 4 வயது ஒடிஷா சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், ‘’சிக்கன் பக்கோடா’’’’ கேட்டதால் அதே தொழிற்சாலையில் பணிபுரியும் வாலிபர் அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர் அமீர்(45). இவர் தனது மனைவி மற்றும் மகள் இஷானி(4) ஆகியோருடன், திருவள்ளூர் அடுத்த நேமம் ஆண்டர்சன்பேட்டை அருகே உள்ள ஹாலோபிளாக் கற்கள் தயாரிக்கும் சேம்பர் ஒன்றில் கடந்த 6 ஆண்டுகளாக தங்கி பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 14ம் தேதி மாலை முதல் இஷானியை காணவில்லை. சிறுமி இஷானியை அமீர் மற்றும் அவரது குடும்பத்தினர் இரவு முழுவதும் தேடி வந்த நிலையில், 15ம் தேதி காலை 8 மணியளவில் சேம்பர் பின்புறம் இஷானி, முகம் முழுவதும் படுகாயங்களுடன் சடலமாக கிடந்தது தெரிந்தது.

இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிந்து, அதே தொழிற்சாலையில் பணிபுரிந்துவரும் ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த காசிராம் மகன் நிலக்கர்(22) என்ற வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், அவர் சிறுமியை அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசாரிடம் கொலையாளி நிலக்கர் அளித்த வாக்குமூலம்: சிறுமி இஷானியை வழக்கம்போல கடந்த 14ம் தேதி மாலை வெள்ளவேடு அழைத்துச் சென்றேன். அங்கு மதுவாங்கி அருந்தினேன். தொடர்ந்து சிக்கன் பக்கோடா வாங்கிக்கொண்டு சிறுமியை சேம்பருக்கு அழைத்து வந்தேன். வரும் வழியில், சிறுபாலம் சுவர் மீது சிறுமியை உட்காரவைத்துவிட்டு, சிக்கன் பக்கோடா சாப்பிட நானும் உட்கார்ந்தேன்.

அப்போது சிறுமி சிக்கன் பக்கோடா கேட்டார். நான் கொடுக்க மறுத்ததால், என் கையை சிறுமி கடித்தாள். இதில் ஆத்திரமடைந்து சிறுமியின் கன்னத்தில் அடித்தேன். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுமி சிறுபால சுவரில் இருந்து கீழே விழுந்தாள். இதில், முகம் முழுவதும் காயம் அடைந்ததால் சிறுமி இறந்தாள். இதையடுத்து, சிறுமியை தூக்கிவந்து சேம்பர் பின்புறம் புதரில் வீசிவிட்டேன். அதன் பின்னர் போலீசார் என்னை கைது செய்துவிட்டனர். இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.இதையடுத்து போலீசார், கொலையாளி நிலக்கரை கைது செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
× RELATED திருவேற்காடு எஸ்ஏ கல்லூரியில் ஆத்திசூடி இலக்கியத் தேடல் நிகழ்ச்சி