×

பார்வதிபுரம் மேம்பால பகுதியில் திடீர் பள்ளம்

நாகர்கோவில், ஜூலை 19: பார்வதிபுரம் பாலம் தொடங்குமிடத்தில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டதால் அதனை சீர் செய்யும் பணிகள் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.நாகர்கோவில், பார்வதிபுரத்தில் ₹114 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் மேல் பகுதியில் கே.பி. ரோட்டில் செல்ல ஒரு வழிப்பாதை அமலில் உள்ளது. மின்வாரிய அலுவலக சாலையில் இரு வழிப்பாதையில் வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. களியக்காவிளையில் இருந்து வருகின்ற வாகனங்கள் பாலத்தின் மீது மின்வாரிய அலுவலக சாலை வழியாகவே  செல்ல முடியும். கே.பி. ரோட்டில் செல்ல முடியாது. இந்த நிலையில் பார்வதிபுரம் மின்வாரிய அலுவலகம் அருகே பாலத்தை சாலையுடன் இணைக்கும் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு பள்ளம் ஏற்பட்டு அது சீர் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் அதே இடத்தில் பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த பள்ளத்தை சீர் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். பள்ளம் உருவான பகுதியில் கான்கிரீட் கலவை வைத்து சீரமைக்கப்பட்டது.

இதனால் அந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. ேபரிகார்டுகள் உதவியுடனும் சாலையின் குறுக்கே பொக்லைன் இயந்திரம் நிறுத்தப்பட்டும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. வாகன ஓட்டிகள் அருகே உள்ள பகுதி வழியாக பாலத்தின் மீது செல்கின்றனர். பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட பெரும்பாலான வாகனங்கள் பாலத்தின் கீழ் பகுதி வழியாக செல்கின்றன. பாலத்தின் கீழ் பகுதியில் பல இடங்களிலும் இரு சக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சாலையோரங்களிலும், பாலத்தின் அடிப்பகுதியிலும் தாறுமாறாக நிறுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போக்குவரத்து போலீசாரும் இல்லை. சட்டம் ஒழுங்கு போலீசாரும் இதனை கண்டுகொள்ளவில்லை. ஒருவழிப்பாதை தொடர்பான அறிவிப்புகள் இருந்தாலும் பாலத்தின் கீழ் பகுதியில் செல்கின்ற வாகன ஓட்டிகள் அதனை பின்பற்றுவது இல்லை. இதனால் எதிரும் புதிருமாக வாகனங்கள் செல்கின்றன. அத்துடன் குறுகலான பாதை என்பதாலும் காலை, மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.




Tags :
× RELATED குழித்துறை மறைமாவட்ட பொது நிலையினர் அமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு