×

சுசீந்திரம் இரட்டை கொலைக்கு காரணம் என்ன?

சுசீந்திரம், ஜூலை 19: நாகர்கோவில் அருகே சிடிஎம்புரம் சானல்கரை ரோட்டில் வண்டிகுடியிருப்பை சேர்ந்த முருகேசபெருமாள் மகன் அர்ஜூன், தென்தாமரைகுளம் தமிழ்செல்வன் மகன் அஜித்குமார் ஆகிய 2 பேரையும் கடந்த 7ம் தேதி ஒரு கும்பல் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தது. இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் அரசன்காட்டுவிளையை சேர்ந்த சுந்தர், நிஷாந்த், வல்லன்குமாரன்விளையை சேர்ந்த மோகன், அவரது தம்பி ரமேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.இந்த நிலையில், போலீசாரால் தேடப்பட்டு வந்த சுந்தர் மற்றும் சுரேஷ் இருவரும் சென்னை தாம்பரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இவர்களை போலீசார் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் கொலை தொடர்பாக விசாரிக்க சுசீந்திரம் போலீசார் கஸ்டடி கேட்டு விண்ணப்பித்தனர். இதன்படி 2 நாள் அவர்களை கஸ்டடியில் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதன்படி போலீசார் நேற்று முன்தினம் இரவு சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அவர்களிடம் கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன், நாகர்கோவில் பயிற்சி டிஎஸ்பி அருண் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது அவர்கள் கொலைக்கான காரணம் குறித்து தெரிவித்துள்ளனர்.அவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது: கொலை செய்யப்பட்ட அஜித்குமார், அர்ஜூன் ஆகியோருக்கும், எங்களுக்கும் முன்விரோதம் இருந்தது. இதனால் அவர்கள் இருவரும் எங்களை பார்க்கும்போதெல்லாம் உங்களை கொல்லாமல் விடமாட்டோம் என மிரட்டி வந்தனர். இதனால் எங்களுக்குள் பகை அதிகமானது.இந்த நிலையில் சம்பவத்தன்று நாங்கள் வீட்டில் இருக்கும்போது போதையில் வந்த இருவரும் எங்களை தரக்குறைவாக பேசி மிரட்டினர். இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் அவர்களை துரத்தி சென்று வெட்டினோம் என கூறியுள்ளனர். விசாரணை முடிந்து நேற்று மாலை இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


Tags :
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி