×

குமரியில் குடிநீர் வடிகால்வாரியம், தொலை தொடர்புதுறையால் அடிக்கடி தோண்டி சிதைக்கப்படும் சாலைகள் பொதுமக்கள் கடும் அவதி

குலசேகரம், ஜூலை 19: கல்வி வளர்ச்சி பெற்ற குமரிமாவட்டம் கல்வியை தவிர மற்ற அனைத்திலும் தன்னிறைவற்ற நிலையில் உள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்ததாக அதிக மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டமாக குமரிமாவட்டம் உள்ளது. மக்கள் நெருக்கம், கல்வி வளர்ச்சி போன்றவற்றின் காரணமாக வாகன நெருக்கமும் அதிகமாக உள்ளது. வாகனங்களின் நெருக்கத்திற்கேற்ப சாலை கட்டமைப்பு வசதிகள் இல்லாதது மாவட்டத்தின் வளர்ச்சியை பின்னோக்கி தள்ளியுள்ளது. இருக்கும் சாலைகளில் பாதுகாப்பாக சென்று வருவது கம்பிமேல் நடப்பது போன்றுள்ளது. அந்த அளவிற்கு சாலைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. குமரிமாவட்டத்தின் நில அமைப்பிற்கேற்ற வகையில் சாலை பணிகள் திட்டமிடப்படாதததாலும் பெருமளவு ஊழல் நடைபெறுவதாலும் சாலைகள் வெகுசீக்கிரத்தில் பழுதாகி விடுகிறது. இவ்வாறு பழுதாகும் சாலைகளை மறுசீரமைப்பு செய்ய எவ்வித நடவடிக்கையும் செய்வதில்லை. ஆண்டுகணக்கில் கிடப்பில் போடப்படுவதால் விபத்துகள் அதிகரித்து உயிர்பலிகள் ஏற்படுகிறது. மக்கள் வீதிக்கு வந்து போராட்டங்கள் நடத்தி நெருக்கடிகள் ஏற்பட்டபிறகு சாலைகளை செப்பனிட அதிகாரிகள் முன்வருகின்றனர். இவ்வாறு பொதுமக்கள் போராடி பெற்ற சாலைகளின் ஈரம் காய்வதற்குள் குடிநீர் வடிகால்வாரியம், தொலை தொடர்புதுறை என மாறி மாறி தங்களின் தேவைகளுக்காக சாலைகளை உடைத்து சேதப்படுத்துகின்றனர்.

தங்களின் தேவை முடிந்தபின் அதனை சீரமைப்பதற்கு அவர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. இதனால் சாலைகள் உடைக்கப்பட்ட பகுதியிலிருந்து தொடர்ச்சியாக உடைந்து சின்னாபின்னமாகிறது. சாலைகளில் தோண்டப்பட்ட பகுதிகளில் கனரக வாகனங்கள் சிக்கி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகிறது.சாலைகளை தோண்டுவதற்கு அல்லது உடைப்பதற்கு சாலைகளை பராமரிக்கும் நெடுஞ்சாலைதுறையிடம் அனுமதி பெறவேண்டும். நீண்டதூரம் ராட்சதகுடிநீர் குழாய்கள் பதிப்பதற்கு அனுமதிகோரும் குடிநீர் வடிகால்வாரியம் அதன்பின்னர் குழாய்களில் உடைப்பு ஏற்படுதல், நீர்கசிவு போன்றவற்றை பழுது பார்ப்பதற்கு எத்தகைய அனுமதியும் பெறுவதில்லை. குடிநீர் வடிகால் வாரியத்தில் நடைபெறும் கமிஷன் ஊழல்களால் தரமற்ற குழாய்கள் பதிக்கப்பட்டு தண்ணீர் அழுத்தம் தாங்காமல் குழாய்களில் அடிக்கடி உடைப்பு, நீர்கசிவு போன்றவை ஏற்படுகிறது. இதனை சரிசெய்வதற்காக நன்றாக இருக்கும் சாலைகளை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் உடைத்து பள்ளம்தோண்டி பழுதான குழாயை மாற்றிவிட்டு அந்தபகுதியை மண்போட்டு நிரப்பி மேல்பகுதியில் மண்குவியலாக கல்லறை அமைப்பது போன்று வைத்து செல்கின்றனர். இதில் இரவு நேரங்களில் வாகனங்கள் அவ்வப்போது சிக்கி விபத்துக்குள்ளாவது சகஜமாக உள்ளது.

ஆற்றூர் பகுதியிலிருந்து பத்மநாபபுரம் கூட்டுகுடிநீர் திட்டத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக பதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உடைந்த குழாய்களை மாற்றுவதற்கு ஆற்றூர், வியன்னூர், பூவன்கோடு, மேக்காமண்டபம், மூலச்சல் போன்ற இடங்களில் இதேபோன்று குடிநீர் வடிகால் வாரியத்தினால் சாலைகள் தோண்டப்பட்டு சேதமாகியுள்ளது. களியலில் திற்பரப்பு தடுப்பு அணையிலிருந்து தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்களில் பாதிப்பு ஏற்படும் போது சாலைகள் உடைக்கப்படுவதால் குலசேகரம், அண்டூர், வலியாற்றுமுகம் போன்ற பகுதிகளில் சாலைகள் நாசமாக்கப்படுகின்றன. இதேபோன்று மாவட்டத்தில் பல பகுதிகளிலும் பொதுமக்கள் போராடி பெற்ற சாலைகள் குடிநீர்வடிகால் வாரியத்தின் தரமற்ற குழாய்களினாலும் பொறுப்பற்றதன்மையினாலும் விரைவாக சேதமடைகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு குடிநீர் திட்டபணிகளுக்கு சாலைகள் உடைக்கும்போது தேவைக்கேற்றவாறு உடைத்துவிட்டு பணிமுடிவடைந்த பின்னர் மண்ணை போட்டு மூடி செல்லாமல் உடைக்கப்பட்ட பகுதியை சரியாக செப்பனிட நடவடிக்கையெடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொலைநோக்கு பார்வை வேண்டும்
இதுகுறித்த தி.மு.க மாவட்ட பிரதிநிதி ஜோஸ்எட்வர்டு கூறுகையில், இன்றைய காலகட்டத்தில் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது சாலை போக்குவரத்து. ஆனால் சரியான திட்டமிடல் இல்லாததால் மக்கள்பணம் பெருமளவு விரயமாகிறது. சாலைகள் அகலப்படுத்தி புதியதாக செப்பனிடும்போது இடையூறாக இருக்கும் மின்கம்பங்கள், மரங்கள் போன்றவை அகற்றப்படுவதில்லை. சாலைகள் செப்பனிட்ட பிறகு சாலைக்குள் அவைகள் வந்துவிடுகிறது. இடையூறாக இருக்கும் மின்கம்பங்கள், குடிநீர் திட்டங்களை மாற்றியமைப்பதற்கு திட்டமிடப்படுவதில்லை. இதேபோன்று சாலைகளின் அடியில் பதிக்கப்பட்டிருக்கும் குடிநீர் குழாய்களில் பாதிப்பு ஏற்படும் போது குழாய்களை சரிசெய்த பின்னர் அந்த பகுதியை அப்படியே விட்டு செல்கின்றனர்.  இதனால் சாலை சேதமாவதுடன் விபத்துகளும் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்கு இவ்வாறு சாலை உடைக்கபட்ட பகுதிகளில் குடிநீர் வடிகால் வாரியத்தினர் சாலைமட்டத்திற்கேற்றவாறு தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு குறைந்தபட்சம் பேவர்பிளாக் கட்டைகளை பரப்பி சரி செய்ய வேண்டும். இதனால் சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு எளிதில் சேதமாவது தடுக்கப்படுவதுடன் விபத்துகளையும் தவிர்க்கலாம். இதற்கு குடிநீர் வடிகால்வாரியம் ஆவன செய்யவேண்டும் என்றார்.

Tags :
× RELATED விஜய்வசந்த், பொன்.ராதாகிருஷ்ணன்,...