மக்காச்சோளத்தை தாக்கும் அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறை

திருக்காட்டுப்பள்ளி, ஜூலை 19: பூதலூர் வட்டரத்தில் செங்கிப்பட்டி, சானூரப்பட்டி, பாலையப்பட்டி வடக்கு, பாலையப்பட்டி தெற்கு, ஆவாரம்பட்டி மற்றும் புதுப்பட்டி ஆகிய கிராமங்களில் மக்காச்சோள பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் மக்காச்சோளத்தை தாக்கும் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலை தொழில்நுட்பங்களோடு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை விவசாயிகள் பின்பற்றி கட்டுபடுத்தலாம்.

ஆழமான உழவு செய்வதன் மூலம் மண்ணில் உள்ள கூட்டுப்புழுக்களை அழிக்கலாம். விவசாயிகள் ஒரே நேரத்தில் விதைப்பு மேற்கொள்வதால் புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம். பவேரியா பேசியானா அல்லது தயோமீதாக்சம் மருந்து ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். கடைசி உழவின்போது ஒரு ஏக்கருக்கு வேப்பம்புண்ணாக்கு 100 கிலோ இட வேண்டும். பயிர் ;நெருக்கமாக இருந்தால் படைப்புழு வேகமாக வளரும். ஆகையால் இடைவெளி 60 சென்டி மீட்டருக்கு 25 சென்டி மீட்டர் என்ற அளவில் இடைவெளியில் விதைக்க வேண்டும்.

இனக்கவர்ச்சி பொறி ஏக்கருக்கு 20 எண்கள் வைத்து தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். வரப்பு பயிராக சூரியகாந்தி, சாமந்தி பூ, தட்டைப்பயறு, ஆமணக்கு சாகுபடி செய்ய வேண்டும். விதைத்த 7ம் நாள் அசாடிராக்டின் மருந்தை 10 லிட்டர் நீரில் 20 மி.லிட்டர் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். மெட்டாரைசியம் அனிசோபிலே என்ற எதிர் உயிர் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 8 கிராம் வீதம் கலந்து இரண்டுமுறை தெளிக்க வேண்டும். படைப்புழு தாக்குதல் அதிகமாக இருப்பின் இமாமெக்டின பென்சோயேட் அல்லது தயோடிகார்ப் மருந்தை தெளித்து கட்டுப்படுத்தலாம். இவ்வாறு பூதலூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: