பொதுமக்கள் அவதி காஞ்சிபுரம் ஆதிஅத்திவரதரை தரிசனம் செய்ய பட்டுக்கோட்டையில் இருந்து சிறப்பு பேருந்து இயக்க வேண்டும்

பட்டுக்கோட்டை, ஜூலை 19: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பட்டுக்கோட்டை கிளை மேலாளர் பிரகாசுக்கு தமிழ்நாடு தெய்வீக தமிழ் புரட்சி பாசறை நிறுவனர் தலைவர் ஆதிமதனகோபால், சமூக ஆர்வலர் சுகுமார் ஆகியோர் கோரிக்கை மனு அனுப்பினர். அதில் காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயில் அனந்தசரஸ் குளத்தில் அமைந்துள்ள ஆதிஅத்திவரதர் சுவாமி 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே வந்து பக்தர்களுக்கு நேரில் அருள்பாலிக்கும் நிகழ்வு காலங்காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த அற்புத நிகழ்வை உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் நேரில் வந்து வழிபடுவதை கடமையாக கொண்டுள்ளனர்.இந்த மாதம் 1ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி வரை ஆதி அத்திவரதரை தரிசனம் செய்ய கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் சென்று வழிபட்டு வருகின்றனர். தமிழக அரசு, பக்தர்கள் வசதிக்காக காஞ்சிபுரம் சென்று மீண்டும் ஊர் திரும்ப தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அதேபோல் பட்டுக்கோட்டை பகுதியிலிருந்தும் பக்தர்கள் நேரடியாக காஞ்சிபுரம் சென்று ஆதிஅத்திவரதரை தரிசனம் செய்து ஊர் திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த கோரிக்கை மனுவின் நகல் தமிழக முதல்வருக்கும், போக்குவரத்துத்துறை அமைச்சர், பட்டுக்கோட்டை எம்எல்ஏ, கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக கோட்ட மேலாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Tags :
× RELATED மக்கள் குறைதீர் கூட்டம் 6 பேருக்கு நலத்திட்ட உதவிகள்