×

நாட்டுப்படகு, விசைப்படகுகளின் மீனவர் பிரச்னைக்கு தீர்வாகாததால் கூட்டம் ஒத்திவைப்பு

பேராவூரணி, ஜூலை 19: நாட்டுப்படகு மீனவர்கள் வாழ்வாதாரத்தை அழிக்கக்கூடிய சேதுபாவாசத்திரத்தில் உள்ள அதிவேக குதிரை திறன் கொண்ட 3 விசைப்படகுகளை அப்புறப்படுத்துவதோடு மீன் பிடிக்க அனுமதி வழங்கக்கூடாது. அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையை பயன்படுத்தும் விசைப்படகுகளை பறிமுதல் செய்ய வேண்டும். விசைப்படகுகள் 5 கடல் மைல் தூரத்திற்கு அப்பால் சென்று மீன் பிடிக்க வேண்டும். சட்டத்தை மீறி கரை பகுதியில் மீன் பிடிக்கும் விசைப்படகுகளை பறிமுதல் செய்ய வேண்டும். பாக் ஜலசந்தி கடலுக்கு உட்பட்ட பகுதியில் 150 குதிரை திறனுக்கு மேலுள்ள விசைப்படகுகளை பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாக்ஜலசந்தி கடலுக்கு உட்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த நாட்டுப்படகு, கண்ணாடி நாரிழை படகு மீனவர்கள்,சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர் .இதையடுத்து பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் ஜெயலட்சுமி தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. தஞ்சை மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார், மீன்வளத்துறை ஆய்வாளர் துரைராஜ், சார் ஆய்வாளர் பார்த்திபன், சேதுபாவாசத்திரம் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, கடலோர காவல்படை சப் இன்ஸ்பெக்டர் மனோகரன், விசைப்படகு மீனவர்கள் தரப்பில் தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொது செயலாளர் தாஜூதீன், தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க தலைவர் ராஜமாணிக்கம், செயலாளர் வடுகநாதன், மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் செந்திலதிபன், முன்னாள் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் செல்வக்கிளி, மீனவர் பேரவை இளைஞரணி செயலாளர் ராஜ்குமார் ஆகியோரும், நாட்டுப்படகு, கண்ணாடி இழைப்படகு, பாரம்பரிய முறையிலான நாட்டுப்படகு மீனவர் சங்கம் சார்பில் நாட்டுப்படகு மீனவர் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் ஜெயபால், செயலாளர் பழனிவேலு, முத்துக்குடா ஆறுமுகம், அதிராம்பட்டினம் காளிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள், சேதுபாவாசத்திரம் துறைமுகத்தில் உள்ள அதிக சக்தி கொண்ட 3 விசைப்படகுகளை தொழில் செய்ய அனுமதித்தால் கடல்வளம் முற்றிலும் பாதிக்கப்படும். மேலும் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலை, டிஸ்கோ வலைகளை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்றனர். விசைப்படகு மீனவர்கள் பேசுகையில், அரசு விதிக்கு உட்பட்டு அனைத்து விசைப்படகுகளையும் அனுமதிக்க வேண்டும். தேவையற்ற முறையில் பிரச்னையை உருவாக்குவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்படியே விசைப்படகு மீனவர்கள் செயல்படுகின்றனர். வெளிமாவட்ட ஆட்களை பேச்சுவார்த்தைக்கு அனுமதிக்கக்கூடாது என்றனர். இதற்கு நாட்டுப்படகு மீனவர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதிக சக்திவாய்ந்த இயந்திரங்கள் பொருத்திய விசைப்படகு அனைத்து மாவட்ட கடல் பகுதியிலும் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்ட மீனவர்களும் கூட்டத்தில் பங்கேற்றது தவறில்லை. அதிக சக்தி கொண்ட இன்ஜின் உள்ள படகுகளை அனுமதிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்ததோடு, இதுபோன்ற படகுகளுக்கு எவ்வாறு அனுமதி அளித்தீர்கள் என மீன்வளத்துறை உதவி இயக்குனரை நோக்கி நாட்டுப்படகு மீனவர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதைதொடர்ந்து விசைப்படகு மீனவர்களுக்கும், நாட்டுப்படகு மீனவர்களும் நேரடியாக விவாதத்தில் ஈடுபட்டனர். இதில் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. சிலர் சமாதான பேச்சுவார்த்தை நடந்த அறையை விட்டு வெளியேறினர்.இதையடுத்து ஆர்டிஓ தலைமையில் விரைவில் முத்தரப்பு பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி பிரச்னையை தீர்த்து கொள்ளலாம். சாலை மறியலை ஒத்தி வைக்க வேண்டுமென தாசில்தார் தெரிவித்து சமாதான கூட்டத்தை ஒத்தி வைத்தார். இதனால் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதையடுத்து இருதரப்பு மீனவர்களும் கலைந்து சென்றனர்.ஆர்டிஓ தலைமையில் பேச்சுவார்த்தை நடக்கிறது
மழையில் நனைந்த வாகன ஓட்டிகள்

Tags :
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா