அரிமளம், திருமயம் பகுதியில் பெய்த கோடை மழையால் ஓரளவு குறைந்தது தீவன தட்டுப்பாடு

திருமயம், ஜூலை 19: அரிமளம், திருமயம் பகுதியில் ஓரிரு இடங்களில் பெய்த கோடை மழையால் கால்நடைகளின் தீவன தட்டுப்பாடு ஓரளவுக்கு குறைந்தது. இதனால் கால்நடை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 மாதங்களுக்கு முன்னர் வீசிய கஜா புயலின்போது பலத்த மழை பெய்தது. அதனை தொடர்ந்து மழையின்றி கடும் வறட்சி நிலவியதால் மாவட்டம் முழுவதும் உள்ள மரங்கள், மேய்ச்சல் நிலங்கள் கருகியது. இதோடு நீர் நிலைகளும் வறண்டு போனதால் கால்நடைகள் தீவனம், குடிநீரின்றி பெரும் சிரமப்பட்டு வந்தன. இதனால் பெரும்பாலான விவசாயிகள் கால்நடைகளை பராமரிக்க முடியாமல் கால்நடைகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதே சமயம் மக்களும் வறட்சி, வெப்ப காற்றால் பெரும் இன்னல்களை சந்தித்து வந்தனர். இந்நிலையில் கோடை மழையும் எதிர்பார்த்தளவு பெய்யாத நிலையில் கோடை மழையை எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

இதனிடையே கடந்த ஒருவாரமாக அரிமளம், திருமயம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்தாலும் மாலை நேரங்களில் ஒரு சில பகுதியில் பலத்த மழையாகவும், சில பகுதியில் சாரல் மழையாகவும் பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகளில் நீர் இல்லையென்றாலும் கடந்த 6 மாதங்களாக உஷ்ணத்தில் தத்தளித்த மக்களுக்கு சற்று ஆறுதல் கிடைத்தது. ஒரு சில பகுதியில் வறண்ட நீர் நிலைகளில் ஓரளவுக்கு தண்ணீர் நிரம்பியதால் கோடை மழைக்கு அப்பகுதி மக்கள், விவசாயிகள் மனமார நன்றி தெரிவித்தனர். கால்நடை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் அரிமளம், திருமயம் பகுதியில் வறண்டு போன மேய்ச்சல் நிலங்கள், மரங்கள், புதர் செடிகள் துளிர்விட தொடங்கியுள்ளது. இதனால் கண்ணுக்கு கொஞ்சம் குளிர்ச்சியாக உள்ள நிலையில் தீவனம் கிடைக்காமல் வெறும் தரையை தடவிய கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கிடைத்துள்ளது.எதிர்பார்த்த அளவு கோடை மழை கை கொடுக்கவில்லை என்றாலும் தற்போது பெய்துள்ள சிறிதளவு கோடை மழை நிறைவு உயிரினங்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது என்றே தோன்றுகிறது.

Tags :
× RELATED விவசாயிகள் சங்கம் கோரிக்கை சர்வதேச தொண்டர்கள் தின விழா