×

புதுக்கோட்டை பகுதியில் அவலம் கறம்பக்குடி அருகே வாலிபர்களை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி சாலைமறியல்

கறம்பக்குடி, ஜூலை 19: கறம்பக்குடி அருகே சொந்தவேலையாக சென்றவர்களை உருட்டு கட்டையால் தாக்கிய வாலிபர்கள் மீது வழக்குப்பதிந்த போலீசார் குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து கிராமமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கரம்பவிடுதி அருகே பில்லுவெட்டு விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் கரம்ப விடுதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவரது மகன் பெயர் முத்துகிருஷ்ணன் (29). இவரும், இவரது உறவினர் ஒரத்தநாடு அருகே உள்ள சோழபுரம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (24) ஆகிய இருவரும் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு சொந்த வேலை காரணமாக ரெகுணாதபுரம் கிராமத்திற்கு சென்று விட்டு அங்குள்ள பசுங்குளத்தில் குளித்து விட்டு அருகில் உள்ள பிள்ளையார் கோயில் அருகே அமர்ந்து இருந்தனர். அங்கு வந்த மருதன்கோன்விடுதி கிராமத்தை சேர்ந்த சிவா, முருகேசன், பவுன்ராஜ் ஆகிய மூவரும் நீங்கள் யார், எதற்கு இந்த இடத்தில் அமர்ந்து இருக்கிறீர்கள் என்று கேட்டு தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்கள் இருவரையும் உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த முத்துகிருஷ்ணன் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து மணிகண்டன் கறம்பக்குடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக தாக்கிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து இதுவரை கைது செய்யவில்லை என்று கூறி உடனடியாக மூவரையும் கைது செய்யக்கோரி கறம்பக்குடி அருகே உள்ள மருதன்கோன் விடுதி 4 ரோடு சாலையில் நேற்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சென்ற கறம்பக்குடி பொறுப்பு இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இன்னும் 2 தினங்களுக்குள் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து விடுவோம் என்று உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் மற்றும் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
இதனால் கறம்பக்குடி தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை கந்தர்வகோட்டை சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags :
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா