×

மலேரியா, டெங்கு மனித குலத்துக்கு சவாலாக உள்ளது

காரைக்கால், ஜூலை 19: மலேரியா, டெங்கு மனித குலத்துக்கு சவாலாக உள்ளது என்று விழிப்புணர்வு முகாமில் நலவழித் துறை துணை இயக்குநர் டாக்டர். மோகன்ராஜ் கூறினார்.புதுச்சேரி நலவழித்துறை சார்பில் திருநள்ளாறு நலவழித் துறை மையத்தில் மலேரியா விழிப்புணர்வு முகாம் சிறப்பாக நடைபெற்றது.தேசிய மலேரியா விழிப்புணர்வு மாதத்தையொட்டி, கமாவட்ட நலவழித் துறை பல்வேறு இடங்களில் மலேரியா குறித்த விழிப்புணர்வு முகாம், பேரணிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருநள்ளாறு சமுதாய நலவழி மையத்தில் மலேரியா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.இதில், திருநள்ளாறு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். நலவழித் துறை துணை இயக்குநர் டாக்டர். மோகன்ராஜ் தலைமை வகித்துப் பேசியது:கொசுவினால் பரவக்கூடிய மலேரியா காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் மனித குலத்துக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த காய்ச்சல் வராமல் இருக்க வேண்டுமெனில், கொசுக்களின் உற்பத்தியை தடுக்க வேண்டும். குறிப்பாக, மலேரியா காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் நமது குடியிருப்பு பகுதியையொட்டி தேங்கும் நல்ல தண்ணீரில் முட்டையிட்டு உற்பத்தி செய்யும். அதனால், குடியிருக்கும் பகுதிகள், பள்ளி வளாகங்களில் எக்காரணம் கொண்டும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

காய்ச்சல் என்பது நடுக்கத்துடன் கூடிய குளிர் காய்ச்சல், விட்டு விட்டு வியர்வையுடன் கூடிய காய்ச்சல் ஆகியவை மலேரியா காய்ச்சலாக இருக்காலாம். இந்த அறிகுறிகள் இருப்பின் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று ரத்தப் பரிசோதனை செய்துகொண்டு சிகிச்சைப் பெறவேண்டும். மலேரியா இல்லாத மாநிலமாக புதுச்சேரியை கொண்டுவர அனைவரின் பங்களிப்பும் முக்கியம் என்றார் முகாமையொட்டி, பள்ளி மாணவ மாணவிகள் பங்குகொண்ட விழிப்புணர்வு நாடகம், பாடல், ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது முகாமில், மருத்துவர் வரலட்சுமி, நலவழித் துறையின் மலேரியா தொழில்நுட்ப உதவியாளர் சேகர், ஆசிரியர் மகாலட்சுமி, சுகாதார ஆய்வாளர் கவிதா மற்றும் சுகாதார உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED வேதாரண்யம் அருகே வாராஹிஅம்மன் கோயில் கும்பாபிஷேகம்