×

பலவேறு கோரிக்கைகள் வலியுறுத்தி துப்புரவு தொழிலாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை: ஆணையாளர் சமரசம்

அரக்கோணம், ஜூலை 19: அரக்கோணத்தில் கோரிக்கைகள் வலியுறுத்தி துப்புரவு தொழிலாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரக்கோணம் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 124 நிரந்தர தொழிலாளர்கள் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் துப்புரவு பணிகள் மேற்கொள்வதில் தோய்வு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால், தினக்கூலி அடிப்படையில் துப்புரவு பணிகள் மேற்கொள்ள தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், தனியார் துப்புரவு ஒப்பந்த தொழிலாளர்கள் 195 பேர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், நகராட்சி நிரந்தர துப்புரவு தொழிலாளர்கள் ஒட்டு மொத்தமாக ஒரு பகுதியிலும், தனியார் துப்புரவு தொழிலாளர்கள் ஒரு பகுதியிலும் என தனித்தனியாக பணிகளை மேற்கொள்ள வேண்டுமென நகராட்சி மூலம் அறிவுறுத்தப்பட்டது.

இதற்கு, நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவாக பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஒன்றிணைந்து சென்று நகராட்சி ஆணையாளர் முருகேசனை சந்தித்து பேசினர்.
அப்போது, நாங்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் துப்புரவுப் பணியை மேற்கொள்ள மாட்டோம். நகர் முழுவதும் ஏற்கனவே துப்புரவு பணிகளை மேற்கொண்டு வந்தோம். தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதிகளில் நாங்கள் துப்புரவு பணிகளை மேற்கொள்வோம். எங்களுடன் கலந்து தனியார் தொழிலாளர்களும் துப்புரவு பணிகளை மேற்கொள்ளலாம் என தெரிவித்தனர். இதற்கு ஆணையாளர், தங்களின் கோரிக்கைகள் குறித்து முறையாக மனு அளித்தாள், பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்படும் என தெரிவித்தார். இதையடுத்து, துப்புரவு தொழிலாளர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்று தங்கள் பணிகளை மேற்கொண்டனர்.

Tags :
× RELATED 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில்