அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் அதிர்ச்சி

வேலூர்: தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் கருவியில் தமிழ் நீக்கப்பட்டு, இந்தி சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 3,688 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 4,040 மேல்நிலைப் பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முதல்கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் தங்கள் வருகையை பதிவு செய்து வருகின்றனர். இதன் மூலம் ஆசிரியர்கள் காலதாமதமாக பள்ளிக்கு வருவது தடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆதாரில் உள்ள முழு விவரங்களுடன் ஆசிரியர்களின் விவரங்கள் இஎம்ஐஎஸ் என்ற இணையதளத்திலும், தனி சாப்ட்வேரிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இருந்தபடியே பள்ளிகளை கண்காணிக்கலாம். இந்த நடைமுறை கடந்த ஜூன் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பயோமெட்ரிக் வருகைப்பதிவு கருவியில் தமிழுக்கு பதில் இந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளது.

வேலூர் தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய பயோமெட்ரிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே தமிழ், ஆங்கிலம் மொழியில் பெயர் விவரங்கள் காட்டப்பட்டு இருந்தது. நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் தங்கள் வருகையை பதிவு செய்தபோது, தமிழுக்கு பதிலாக இந்தியும், ஆங்கிலமும் பதிவானது. இதைப்பார்த்த ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏற்கனவே ஆங்கிலம், இந்தி மொழிகளில் தபால்துறை தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தமிழ்மொழி உட்பட அனைத்து மாநில மொழியிலும் தபால்துறை தேர்வு எழுதலாம் என மத்திய அரசு அறிவித்ததுடன் தபால்துறை தேர்வையும் ரத்து செய்தது.

இந்நிலையில் பள்ளி வருகை பதிவை மேற்கொள்ளும் பயோமெட்ரிக் கருவியில் தமிழை நீக்கி, இந்தியை கொண்டு வந்திருப்பது ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘பயோமெட்ரிக் கருவியில் ஆசிரியர்களின் விவரங்களை ஆதார் அடிப்படையில் ஆங்கிலத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதன்படி, பயோமெட்ரிக் பதிவின் முகப்பதிவில் ஆசிரியர்களின் கைரேகை பதிவு, ஆசிரியர்களுக்கு தனித்தனியாக வழங்கப்பட்ட வருகைப்பதிவு செய்ய 8 இலக்கு எண் பதிவு ஆகியவை ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தது. ஆரம்பத்தில் இருந்தே இந்தி மொழி இருந்தது. தற்போது முகப்பதிவில் இந்தி மொழி திரையில் தெரிகிறது’ என்றனர்.

Related Stories: