மக்கள் சாலை மறியல் துறையூர் அருகே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

துறையூர், ஜூலை 18: துறையூர் அருகே திருமனூர் கிராமத்தில் கடந்த 6 மாதமாக முறையாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.துறையூர் அருகே திருமனூர் கிராமத்தில் 500 குடும்பத்தினருக்கு மேல் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் கடந்த 6 மாத காலமாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இது குறித்து பொதுமக்கள் துறையூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும் ஊராட்சி செயலரிடமும் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் ஊராட்சி செயலரிடம் பொதுமக்கள் முறையிட்டபோது, மின்சார பற்றாக்குறை, ஆழ்குழாய் கிணறுகளில் குடிநீர் பற்றாக்குறை என பல காரணங்களைக் கூறி உரிய பதில் அளிக்காமல் காலதாமதம் செய்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் திருமனூர் சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த துறையூர் காவல்துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பெரியசாமி ஆகியோர் கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மிக விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கூறியதை அடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலில் 200க்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இதனால் துறையூர் தா.பேட்டை சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: