அமைச்சர் அறிவிப்பின்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் போலீசில் புகார்

திருச்சி, ஜூலை 18: டெல்டாவில் பல இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வு பணி தொடங்கி உள்ளது. இதனால், சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவித்தப்படி, டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் பணிகள் செய்து வரும் நிறுவனங்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என விவசாயிகள் போலீசில் புகார் செய்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கும், மத்திய அரசின் நிறுவனங்களாக ஓஎன்ஜிசி, ஐஓசி, ஆகியவற்றுக்கு ஏற்கனவே அனுமதி அளித்து உள்ளது. இந்த நிறுவனங்கள் இங்கு பணிகளை தொடங்கினால், டெல்டா மாவட்ட விவசாயம் அடியோடு அழிந்து விடும். தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழப்பார்கள். குடிநீர் பஞ்சம் ஏற்படும் என டெல்டா மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்காக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
Advertising
Advertising

இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து ஹைட்ரோ கார்பனுக்கு தடை விதிக்க வேண்டும், இது குறித்து ஒரு கொள்கை முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும். அதுவும் இந்த கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என்று பேசினார். இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்க, ஆய்வு செய்ய, உற்பத்தி செய்ய வேண்டும் என்றால் தமிழக அரசிடம் அனுமதி பெற வேண்டும். எனவே, கொள்கை முடிவு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதையும் மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உரிமை இருக்கிறது என்றார்.

தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என்று கூறிக்கொண்டே இருக்கும் நிலையில் மத்திய அரசு தொடர்ந்து ஹைட்ரோ கார்பனுக்கு அனுமதி வழங்கி கொண்டே இருக்கிறது. அதன்படி, டெல்டாவில் பல இடங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு பணி நடந்து வருகிறது. நேற்று திருவாரூர் மாவட்டம், கோட்டூர் உள்ளிட்ட பல இடங்களில் ஆய்வு நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அமைச்சர் கூறியது போல கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படுமா என டெல்டா விவசாயிகள் மத்தியில் கேள்வி எழுந்து உள்ளது.

காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் கூறியதாவது: தமிழக அரசை , மத்திய அரசு ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. தமிழக அரசை அவர்கள் சட்டை செய்வதே இல்லை. 2015ல் ஜெயலலிதா கொண்டு வந்த தடை சட்டம் மூலமே ஹைட்ரோ கார்பனை தடை செய்ய முடியும். அதை இவர்கள் செய்ய மாட்டார்கள். அப்படி தடை செய்வதாக இருந்தால் இவர்கள் சட்டம் இயற்ற வேண்டியது தானே. தமிழக அரசின் மீது நம்பகத்தன்மை இல்லை. எதற்கெடுத்தாலும் நானும் விவசாயி என்று சொல்லும் முதல்வர், 110 அறிக்கை படிக்கும் முதல்வர், இந்த விவகாரத்தில் 110 விதியின் கீழ் ஒரு உத்தரவு போட வேண்டியது தானே. இவர்களால் டெல்டா மாவட்டங்களை காப்பாற்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் சுந்தர விமலநாதன் கூறியதாவது:அமைச்சர் கூறியது போல, ஹைட்ரோ கார்பன் திட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து அவர்களை ஜாமீனில் வர முடியாதபடி கைது செய்ய வேண்டும். மத்திய அரசு மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும். தமிழக அரசு மக்களை ஏமாற்றும் வேலையை செய்து கொண்டு இருக்கிறது. மத்திய அரசு தமிழக மக்களை அழிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போல மக்கள் வெகுண்டு எழும் நாள் வரும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: