×

எம்பி பாஸை காட்டியும் விடாததால் சுங்கச்சாவடி ஊழியருடன் அதிமுகவினர் வாக்குவாதம் வையம்பட்டி அருகே பரபரப்பு

மணப்பாறை, ஜூலை 18: மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே பொன்னம்பலபட்டியில் சுங்கச்சாவடி உள்ளது. திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த சுங்கச்சாவடியை தினசரி ஏராளமான கார், வேன், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கடந்து செல்கின்றன. இந்நிலையில், நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் 5 பேருடன் ஒரு காரில் சபரிமலை நோக்கி சென்றார். அவரது கார், வையம்பட்டியை அடுத்த பொன்னம்பலபட்டி சுங்கச்சாவடியை கடக்க முயன்றபோது, சுங்கச்சாவடியில் இருந்த பணியாளர் ஒருவர் சுங்கக் கட்டணம் கேட்டுள்ளார். அதற்கு காரில் இருந்தவர்கள் எம்.பி. ஒருவரின் பாஸை காட்டி இலவசமாக செல்ல அனுமதிக்குமாறு கேட்டுள்ளனர். இதனை ஏற்க மறுத்த சுங்கச்சாவடி ஊழியர் கட்டணம் செலுத்துமாறு கேட்கவே, எம்பி.,யின் பாஸை காட்டியும் கட்டணம் கேட்பதா என கூறியதையடுத்து இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதனையடுத்து, வையம்பட்டி போலீசார் இரு தரப்பினரையும் காவல் நிலையம் வரவழைத்து விசாரித்தனர். இதன் பின்னர், சமரசம் ஏற்பட்டதையடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது. சுங்கச்சாவடியில் நடந்த இந்த மோதலையடுத்து, அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags :
× RELATED மணப்பாறை அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை