₹15 கோடி நிதி ஒதுக்கியும் கிடப்பில் போடப்பட்ட சரபங்கா நதி சீரமைப்பு பணி

ஓமலூர், ஜூலை 18: ஓமலூர் அருகேயுள்ள சேர்வராயன் மலைப்பகுதியில் சரபங்கா ஆறு உற்பத்தியாகிறது. இந்த ஆறு மேற்கு மற்றும் கிழக்கு சரபங்கா என இரண்டு பிரிவுகளாக வந்து ஓமலூரில் ஒன்றிணைகிறது. ஓமலூர், தாரமங்கலம், இடைப்பாடி வழியாக சுமார் 70 கிலோ மீட்டர் பயணம் செய்து பூலாம்பட்டி காவிரியில் கலக்கிறது. ஆனால், சரபங்கா ஆறு பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் சுருங்கிவிட்டது. இதனால், மழைக்காலங்களில் சரபங்கா ஆற்றில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழைக்கு மேற்கு சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, டேனிஷ்பேட்டையில் பெத்தேல்பாலம் முழுமையாக அடித்து செல்லப்பட்டது. இதனால், 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து தடைபட்டது. இதனை தொடர்ந்து, காடையாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள சரபங்கா ஆற்றை தூர்வாரி, கரைகளை அகலப்படுத்தி, தடுப்புசுவர் அமைக்க மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ₹15 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டார். சரபங்கா நதி சீரமைப்பு திட்டத்தின் கீழ் நடந்து வந்த பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. மேலும், சரபங்காநதி மூலம் நூற்றுக்கும் மேற்படட ஏரிகளுக்கு செல்லும் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் புதர் மண்டியுள்ளதால் மழைகாலங்களில் ஏரிகளுக்கு வரும் நீர் தடைபட்டு வீணாகிறது.

தற்போது மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், ஆற்றை தூர்வாரி கரையை பலப்படுத்தும் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்ற முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே ஓமலூர் வட்டாரத்தில் உள்ள சரபங்கா நதியை சீரமைக்க ₹15 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். ஆனால், அந்த பணிகள் இதுவரை துவங்கவில்லை.

இதுகுறித்து பொதுப்பணித்துறை பொறியாளர் மோகன்ராஜ் கூறுகையில், ‘மறைந்த முதல்வர் ஜெயலலிதா நிதி ஒதுக்கீடு செய்த பணிகள் டேனிஷ்பேட்டை மற்றும் எடப்பாடி ஆகிய பகுதிகளில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. தற்போதைய முதல்வர் அறிவித்த திட்டப்பணிகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப பிரச்னைகள் சீராக்குதல் குறித்து, நபார்டுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி கிடைத்ததும் பணிகள் துவங்கப்படும்,’ என்றார்.

Related Stories: