மேட்டூர் ஐடிஐ.,யில் புதிய பிரிவு தொடக்கம் பயிற்றுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

சேலம், ஜூலை 18: மேட்டூர் அரசு ஐடிஐ.,யில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பிரிவில், பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரில் அரசு ஐடிஐ செயல்பட்டு வருகிறது. இதில், பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு திட்டத்தின் கீழ், கம்மியர் குளிர்சாதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுப்படுத்துதல் பிரிவு புதிதாக துவங்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் உள்ள தற்காலிக பயிற்றுநர் பணிக்கு, மாதம் ₹20 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள், மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருப்பதுடன், 2 வருட காலம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும், சிஐடிஎஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியாகி இருப்பதுடன், 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அத்துடன் மாற்றுத்திறனாளி, கலப்பு திருமணம் செய்தவர், போரில் உயிரிழந்தவரின் மனைவி, மகன், ஆதரவற்ற விதவை என்பதற்கான ஆர்டிஓ வழங்கிய சான்றிதழ், அரசுக்கு நிலம் வழங்கியவர்களின் நேரடி வாரிசு, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசு, மொழிப்போர் தியாகிகளின் வாரிசு என்பதற்கான சான்றிதழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தகுதி உடையவர்கள் பெயர், கல்வித்தகுதி, இனம் மற்றும் முகவரி, செல்போன் எண்ணுடன் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், மேட்டூர் அணை-636 452 என்ற முகவரிக்கு, வரும் 31ம் தேதி மாலைக்குள் வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 04298 244065 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மேட்டூர் ஐடிஐ முதல்வர்  லீமாரோஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: