கடும் துர்நாற்றத்தால் மூச்சுத்திணறல் ஆலையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

மேட்டூர், ஜூலை 18:மேட்டூரில் ஹைட்ரஜன் பெராக்சைடு தயாரிக்கும் ஆலையிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிக்கு ஆளான பொதுமக்கள், ஆலையை மூடக்கோரி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  மேட்டூரில் தனியாருக்கு சொந்தமான ஹைட்ரஜன் பெராக்சைடு ஆலை ₹100 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக உற்பத்தி தொடங்கப்பட்டு ஆலை இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, ஆலையிலிருந்து திடீரென கடும் துர்நாற்றம் வீசியது. இதனால், சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மக்கள் கடுமையான மூச்சுத்திணறலுக்கு ஆளாகினர். இதனை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் ஆலையின் நுழைவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணிநேரத்தில் துர்நாற்றம் படிப்படியாக குறைந்தது. அதன்பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து, நேற்று திடீரென ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆலையால் உடல் பாதிப்புகள் ஏற்படுவதால் ஆலையை மூடக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆலை நிர்வாகத்தினர் சார்பில், ஆலையால் எந்த பாதிப்பும் ஏற்படாது. பாதிப்பு ஏற்படுவதாக கருதினால் படிப்படியாக உற்பத்தி நிறுத்தப்படும் என்று உறுதியளித்தனர். அதன் பிறகு போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: