உணவு பாதுகாப்பை உறுதி செய்ய பொது விநியோக திட்டத்தில் தானிய வகைகளை வழங்க எதிர்பார்ப்பு

சேலம், ஜூலை 18: உணவுபாதுகாப்பை உறுதிசெய்ய பொதுவிநியோக திட்டத்தில் தானிய வகைகளை வழங்க வேண்டும் என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பு, பெரியார் பல்கலைக்கழக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்து நாட்டின் ஹார்ட்போர்ட் சையர் பல்கலைக்கழகம் இணைந்து, நில உரிமை மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் காடையாம்பட்டி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய இரு ஒன்றியங்களில் உள்ள 35 கிராமத்தில் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. சுமார் 3 ஆண்டுகள் நடக்கும் இந்த ஆய்வில், 1,000 குடும்பங்களை நேரடியாக சந்திப்பதுடன், அவர்களுடன் த்து, நேர்காணல் நடத்தி தகவல்கள் திரட்டப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின் முதற்கட்ட அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.  ஹார்ட்போர்ட் சையர் பல்கலைக்கழக பேராசிரியர் ஹூலியா மற்றும் பெரியார் பல்கலைக்கழக வணிகவியல் துறைத்தலைவர் இளங்கோவன் ஆகியோர் ஆய்வறிக்கையை வெளியிட, துணை வேந்தர் குழந்தைவேலு பெற்றுக்கொண்டார். அப்போது, ஆய்வினை மேற்கொண்டு வரும் இணை பேராசிரியர்கள் பரிமளவள்ளி, சாமுண்டேஷ்வரி குப்புசாமி, ஆய்வு மாணவர்கள் மணிகண்டன், கல்பனா, லியானே ஊஸ்டர் பேன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து ஆய்வுக்கு குழுவினர் கூறியதாவது:

பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் உக்கேரி என்ற அமைப்பின் ₹1.80 கோடி நிதியுதவியுடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில், நில உரிமை மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளது. உணவு பாதுகாப்பு என்பது பலதரப்பட்ட உணவு வகைகளை உள்ளடக்கியது. ஆனால், நமது பகுதி மக்கள் குறிப்பிட்ட சில உணவுகளை மட்டுமே தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வதால், போதுமான ஊட்டச்சத்து கிடைக்காமல் போகிறது. அரிசி மட்டுமல்லாமல், சோளம், ராகி, கம்பு, கேழ்வரகு போன்றவற்றை சரிவிகிதத்தில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பொது விநியோக திட்டத்தில் அரிசி, சர்க்கரை வழங்குவது போல, தானிய வகைகளையும் சேர்த்து விநியோகித்தால், இதற்கு தீர்வாக அமையும். நேர்காணலில் கலந்து கொண்ட மக்களும், இதனை தங்களது எதிர்பார்ப்பாக பதிவு செய்துள்ளனர். ஆய்வு மேற்கொண்ட பகுதிகளில் 13 சதவீதம் பேர், ஒருசில நேரங்களில் உணவிற்கு வழியில்லாமல் பசியுடன் உள்ளனர். அதேசமயம், 40 சதவீதம் பேர் உணவு இருந்தும், வேலைப்பளு காரணமாக அதனை ஒரு பொருட்டாக கொள்ளவில்லை. உணவு பாதுகாப்பிற்கு, நிலப்பகிர்வு நடவடிக்கை ஒரு தீர்வாக அமைய வாய்ப்புள்ளது. ஆய்வுகள் முழுமையாக முடிந்த பின்னர், இதுதொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: