சேலம் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் 87 பேருக்கு சேர்க்கை ஆணை

சேலம் ஜூலை 18: சேலம் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்புக்கு, இதுவரை 87 பேருக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே மாதம் 5ம் தேதி எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைகான நீட் தேர்வு நடந்தது. 15லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் தமிழகத்தில் 1,38,997 பேர் விண்ணப்பித்ததில் 1,23,078 பேர் தேர்வு எழுதினர்.  இந்த தேர்வு முடிவு கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க தொடங்கினர். இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் பட்டியல் கடந்த 6ம் தேதி வெளியிடப்பட்டு சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் கவுன்சிலிங் நடந்தது. சேலம் அரசு மருத்துவகல்லூரியில் மாநில கோட்டாவில் 85 இடங்களும், அகில இந்திய கோட்டாவில் 15 இடங்களும் என மொத்தம் 100 இடங்கள் உள்ளன.

மேலும் அரசு மருத்துவக்கல்லூரிக்கு ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு கடந்த 9ம் தேதி முதல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு சேர்க்கைக்கான ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளது. இதில் மாநில கோட்டாவில் உள்ள 85 இடங்களும் நிரம்பிவிட்டன. அகில இந்திய கோட்டாவில் உள்ள 15 இடங்களில் 2 இடங்கள் மட்டும் நிரப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவக்கல்லூரி அதிகாரிகள் கூறுகையில், ‘கவுன்சிலிங்கில் ஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்து சேர்க்கை ஆணை வழங்க்பபட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை சுற்றியுள்ள நாமக்கல், தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் இல்லாமல் விழுப்புரம், கரூர் போன்ற மாவட்டங்களில் இருந்தும் படிக்க மாணவர்கள் வந்துள்ளனர். அகில இந்திய கோட்டாவில் உள்ள 13 இடங்களும் விரைவில் நிரப்பப்படும்,’ என்றனர்.

Related Stories: