நூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு ஊராட்சி செயலர் மீது கலெக்டரிடம் புகார்

ஆத்தூர், ஜூலை 18: அக்கிசெட்டிபாளையம் கிராமத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டு வரும் ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை கோரி, பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். ஆத்தூர் ஒன்றியம் அக்கிசெட்டிபாளையம் கிராம மக்கள் சார்பில், கலெக்டர் மற்றும் மாவட்ட திட்ட இயக்குனர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: அக்கிசெட்டிபாளையம் கிராமத்தில், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் முறையாக பணிகள் வழங்காமல் கடந்த 7 ஆண்டுகளாக கிராம ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறார். 20 நபர்களுக்கு பணி வழங்கி விட்டு, 40 பேர் பணி செய்தாக கூறி போலி பணி அட்டைகளை வழங்கியுள்ளார். அவர்களுக்கான கூலியை வங்கியில் போட்டு விட்டு, அதனை அவரே எடுத்து கொடுக்க கூறி, அந்த நபர்களுக்கு ₹1000 வழங்கி விட்டு மீதி பணத்தை தானே எடுத்துக் கொள்கிறார். இதுகுறித்து பலமுறை ஒன்றிய ஆணையாளர் குணசேகரன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கூறியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனியார் பள்ளியில் பணியாற்றும் பெண் பெயரில், அவர் பணி செய்ததாக பணம் எடுக்கப்பட்டுள்ளதை ஆதாரமாக கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும், பணி பொறுப்பாளர்களாக இருக்கும் 6 பேர், ஆண்டு முழுவதும் வெவ்வேறு பெயர்களில் பணியாற்றி வருகிறார்கள். இதுகுறித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இதுகுறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: