×

தாரமங்கலம் புறவழிச்சாலையை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்

ஓமலூர், ஜூலை 18: தாரமங்கலத்தில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, புதியதாக அமைக்கப்பட்டுள்ள நான்குவழி புறவழி சாலையை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓமலூரில் இருந்து தாரமங்கலம், சங்ககிரி வழியாக மாநில நெடுஞ்சாலை செல்கிறது. தாரமங்கலம் நகரில் சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் நடந்து வந்தது. இந்த சாலை வழியாக ஓமலூரிலிருந்து தாரமங்கலம், சங்ககிரி வழியாக கோவை, கேரளாவுக்கு செல்ல முடியும். இந்த வழியை தவிர்த்து சேலம் வழியாக சென்றால், இடையில் 2 டோல்கேட்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதனால், 90 சதவீத லாரிகள் இந்த வழியாக இயக்கப்பட்டு வருகிறது. மேலும், தாரமங்கலம் பகுதி குறுகிய சாலை என்பதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், தாரமங்கலம் நகரை தவிர்த்து புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கான நிலம் தேர்வு குறித்தும் தினகரனில் செய்திகள் வெளிவந்தது.

சேலம் மாவட்ட பொதுமக்களும் சாலை அமைக்க வலியுறுத்தி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து, முதல்வர் நிலத்திற்கான இழப்பீடு மற்றும் சாலை அமைக்க ₹25 கோடி நிதி ஒதுக்கி, புறவழிச்சாலை அமைக்க உத்தரவிட்டார். இப்பணிகள் கடந்த ஓராண்டாக நடந்து முடிந்தது. பணிகள் முடிந்து கடந்த சில மாதங்களாகியும், சாலை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் உள்ளது. மேலும், வாகனங்கள் செல்லாத வகையில் சாலையில் ஆங்காங்கே மண் மற்றும் மரக்கட்டைகளை போட்டு தடுக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். தாரமங்கலம் நகரப்பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், விரைவில் இந்த சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்