×

7 ஆண்டு போராட்டத்துக்கு பின் டிஇஓ அலுவலகத்துக்கு நிரந்தர ஓட்டுனர் பணியிடம்

நாமக்கல், ஜூலை 18: 7 ஆண்டு கால போராட்டத்துக்கு பின், நாமக்கல் டிஇஓ  அலுவலகத்துக்கு நிரந்தர வாகன ஓட்டுனர் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலக பயன்பாட்டில் இருந்த ஜீப், கடந்த 2012ம் ஆண்டு தகுதியிழப்பு செய்யப்பட்டது. இதையடுத்து ஜீப் ஓட்டுனர் பணியிடம், மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து எடுக்கப்பட்டு, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்துக்கு மாற்றப்பட்டது. ஓராண்டுக்கு பின் 2013ம் ஆண்டில் மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு, பள்ளி கல்வித்துறை புதிய ஜீப்பை ஒதுக்கியது. ஆனால், வாகன ஓட்டுனர் பணியிடம் ஒதுக்கப்படவில்லை. இதனால், நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலராக வரும் பல அதிகாரிகள், தங்களது சொந்த வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கு ஆய்வுக்கு சென்று வந்தனர். சில சமயங்களில் மாற்றுப்பணி என்ற அடிப்படையில், அரசு பள்ளிகளில் காவலாளி, அலுவலக உதவியாளர்கள் வாகனங்களை இயக்க தெரிந்தவர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர்.

புதிய வாகன ஓட்டுனர் பணியிடத்தை ஏற்படுத்தக்கோரி, கடந்த 7ஆண்டாக பள்ளி கல்வித்துறைக்கு தொடர்ந்து கடிதங்கள், மாவட்டகல்வி அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டு வந்தது.  இந்நிலையில் கடந்த மாதம் டிஇஓ இன்சார்ஜாக நியமிக்கப்பட்ட உதயக்குமார், வாகன ஓட்டுனர் பணியிடத்தை நிரப்பக்கோரி, பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார். தற்போது, நிரந்தர டிரைவர் பணியிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருச்செங்கோடு கல்வி மாவட்ட அலுவலகத்தில் கூடுதலாக உள்ள ஒரு டிரைவர் பணியிடத்தை, நாமக்கல்லுக்கு ஒதுக்கி பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) நாகராஜ் முருகன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, திருச்செங்கோடு கல்வி மாவட்ட  அலுவலகத்தில் பணியாற்றி வந்த டிரைவர் ராஜா, நேற்று நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.

Tags :
× RELATED வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்