28 ஆண்டுகளுக்கு பின்னர் தாசகவுண்டன் ஏரியை தூர்வாரும் பணி தொடக்கம்

கிருஷ்ணகிரி, ஜூலை 18:  கிருஷ்ணகிரியில் 28 ஏக்கர் பரப்பளவு கொண்டு தாசகவுண்டன் ஏரியை தூர்வாரும் பணி தொடங்கியது. கிருஷ்ணகிரி நகரில் பாப்பாரப்பட்டியில் 28 ஏக்கர் பரப்பளவில் பாப்பாரப்பட்டி (எ) தாசகவுண்டன் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு கிருஷ்ணகிரியில் மலையில் இருந்தும், சின்னஏரி மற்றும் படேதலாவ் ஏரி நிரம்பி வழியும் தண்ணீர் மற்றும் பழையபேட்டையில் இருந்து மழைநீர் வரும். இதன் மூலம் சுமார் 200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. இந்த ஏரி நிரம்பி வெளியேறும் தண்ணீர் ராஜகால்வாய்கள் மூலம் அவதானப்பட்டி ஏரியில் கலக்கிறது. நகரின் வளர்ச்சி காரணமாக, தாசகவுண்டன் ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் சுருங்கியது. மேலும், நீர் வரத்து கால்வாய்கள், கழிவுநீர் கால்வாய்களாக மாறியது. இதே போல், கடந்த 50 ஆண்டுகளில் எப்போதும் நீர் நிரம்பி காணப்படும் பாப்பாரப்பட்டி ஏரியில், இவ்வாண்டு நீரின்றி வறண்டு காணப்படுகிறது. தற்போது மாவட்டம் முழுவதும் ஏரிகள், குளங்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, பாப்பாரப்பட்டி பகுதி பொதுமக்கள் ஒன்றிணைந்து, ₹10 லட்சம் மதிப்பில் ஏரியை தூர்வாருதல், நீர்வரத்து கால்வாய்கள் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள முடிவு செய்தனர். ஏரியை தூர்வாரும் பணியை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி நேற்று தொடங்கி வைத்தார். நகர்மன்ற முன்னாள் தலைவர் தங்கமுத்து தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் ரமேஷ், ஊர் முக்கிய பிரமுகர்கள் செல்வம், காத்தவாராயன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.  இந்நிகழ்ச்சியில், நகராட்சி பொறியாளர் சிசில் தாமஸ், சுகாதார அலுவலர் மோகனசுந்தரம், அதிமுக நகர செயலாளர் கேசவன், அதிமுக நிர்வாகிகள் செல்வம், மாதையன், சரவணன், சின்னராஜ், வடிவேல், சீனிவாசன், பழனி, வெங்கடேசன், காளியப்பன், வடிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

× RELATED திருமாவளவன் பிறந்த நாள் விழா