கிருஷ்ணகிரி அணை கூட் ரோட்டில் தெரு விளக்குகள் எரியாததால் மக்கள் அவதி

கிருஷ்ணகிரி, ஜூலை 18:  கிருஷ்ணகிரி அணை கூட் ரோட்டில் இருந்து அணை வரை தெருவிளக்குகள் ஒன்று கூட எரியாததால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அணைக்கு செல்லும் கூட் ரோடு அருகே இருந்து அணை வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இந்த வழியாக தான் பச்சிகானப்பள்ளி, வெங்கிலிகானப்பள்ளி, சோக்காடு, மோரமடுகு, கால்வேஅள்ளி ஆகிய 5 ஊராட்சிகளில் உள்ள கிராமங்களுக்கு விவசாயிகள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். இந்நிலையில் அணை கூட் ரோட்டில் இருந்து அணை வரை சுமார் 3 கிமீ தூரம் வரை சாலையோரம் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். அவர்களின் கால்நடைகளை அங்கேயே வளர்க்கின்றனர். மாலை மற்றும் இரவு நேரங்களில் இச்சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் போதிய வெளிச்சம் இல்லாததால் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மணணவிகள் மாலை நேர வகுப்புகளை முடித்துவிட்டு வீடுகளுக்கு செல்ல அச்சப்படும் நிலை உள்ளது. காரணம் இங்குள்ள மின்கம்பங்களில் உள்ள விளக்குகள் 6 மாதங்களாக எரிவதில்லை. இது குறித்து பலமுறை பொதுமக்கள் மின்சார வாரியத்திற்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே, உடனடியாக இந்த பகுதியில் உள்ள தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED ஜேஆர்சி மாணவர்களுக்கு உண்டு உறைவிட பயிற்சி முகாம்