உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு

தர்மபுரி, ஜூலை 18: தர்மபுரி அருகே முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி, மூதாட்டியிடம் நகை பறித்துச் சென்ற வாலிபரை ேபாலீசார் தேடி வருகின்றனர். காரிமங்கலம் சி.மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சின்னகுட்டி. இவரது மனைவி ராணி(70). இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், நேற்று முன்தினம் காரிமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது, அங்கிருந்த வாலிபர் ஒருவர், தன்னுடன் வந்தால் முதியோர் உதவித்தொகை வாங்கித்தருவதாக கூறினார். அதை நம்பிய ராணி, அந்த நபருடன் ஆட்டோவில் சென்றார். அப்போது, நகை அணிந்திருந்தால், உதவித்தொகை தர மாட்டார்கள் என்று கூறிய அந்த நபர், ராணி அணிந்திருந்த செயின், தோடு ஆகியவற்றை கழற்றி தரும்படி கேட்டு, தன்னிடம் இருந்த பேப்பரில் கட்டி வைத்துக் கொண்டார்.பின்னர், சாவடி பகுதியில் உள்ள விஏஓ அலுவலகம் அருகே சென்றதும், இருவரும் கீழே இறங்கினர். அப்போது, திடீரென அந்த வாலிபர் திடீரென ஓட்டம் பிடித்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த ராணி, உதவி கேட்டு கூச்சலிட்டார். ஆனால், அதற்குள் அந்த நபர் தப்பியோடி விட்டார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கதறியழுத ராணி, சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

× RELATED வேப்பிலைப்பட்டியில் உரம் தயாரிப்பு நிலையத்தை செயல்படுத்த வலியுறுத்தல்