மாவட்டத்தில் கடும் வறட்சியால் போதிய தண்ணீரின்றி நலிவடைந்த பசுமை குடில் நாற்றுப்பண்ணைகள்

தர்மபுரி, ஜூலை 18: தர்மபுரி மாவட்டத்தில் கடும் வறட்சியால் தண்ணீர் இல்லாமல் பசுமை குடில் நாற்றுப்பண்ணைகள் நலிவடைந்து அழியும் நிலையில் உள்ளது. தமிழகத்தில் ஓசூருக்கு அடுத்தபடியாக தர்மபுரி மாவட்டத்தில் பசுமை குடில் அமைத்து, தக்காளி, கத்திரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறி, பூச்செடி நாற்றுகள் உருவாக்கி விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பசுமை குடில்கள் இருந்தன. அதகப்பாடி, செக்காரப்பட்டி, இண்டூர், பி,அக்ரகாரம், பென்னாகரம், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில், கடந்த ஆண்டு போதிய மழை இல்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டது. தற்போது நிலத்தடி நீர்மட்டம் 1,500 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. இதனால் போதிய நிலத்தடிநீர் இல்லாமல், பசுமை குடில் செயல்படுத்த முடியாமல் விவசாயிகள் தவித்தனர். தண்ணீர் இல்லாமல் அதகப்பாடி பகுதியில் சில பசுமை குடில்கள் மூடப்பட்டன.தற்போது, தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், பூமியில் ஈரப்பதம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஒருசில விவசாயிகள் பசுமை குடில் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். தக்காளி, மிளகாய் நாற்றுகள் வளர்த்து பராமரித்து வருகின்றனர். விவசாயிகளுக்கு ஒரு தக்காளி நாற்று ₹35 பைசா முதல் ₹40 பைசா வரை விற்கின்றனர். இதுகுறித்து விவசாயி சென்றாயன் கூறுகையில், ‘பசுமை குடில் வேளாண்மை மூலம் பாரம்பரிய விவசாய முறையை ஒப்பிடும்போது, 10 மடங்கு விளைச்சல் அதிகம். பசுமை குடில்கள் அனைத்து தட்பவெப்ப நிலைக்கு ஏற்றது. நோய் தாக்கமும் குறைவு, பாதுகாக்கப்பட்ட வேளாண்மை, குறைந்த நீர், உரம் போதுமானது. 15 வருடங்கள் நீடிக்கும். தக்காளி, மிளகாய், கத்திரி, மலர், குடை மிளகாய் போன்ற எல்லா வகையான காய்கறிகளும், எல்லாவகையான மலர்களுக்கும் இக்குடிலுக்கு உகந்தது. பசுமை குடில் அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்குகிறது. வறட்சியால் தண்ணீர் இல்லாமல் பசுமை குடில் பராமரிக்க முடியாமல் உள்ளது. பசுமை குடில் அமைக்கும்பணி தற்போது நலிவடைந்தநிலையில் உள்ளது,’ என்றார்.

Tags :
× RELATED கடத்தூர் பகுதியில் சாலையோரம் கட்டி...