பாப்பிரெட்டிப்பட்டி அருகே கர்ப்பிணி தற்கொலை வழக்கில் கணவர் கைது

தர்மபுரி, ஜூலை 18: பாப்பிரெட்டிப்பட்டி அருகே கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவரை ேபாலீசார் அதிரடியாக கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சாலூர் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி- சகுந்தலா தம்பதியின் மகள் பாஞ்சாலி (23). இவருக்கும் கல்லாத்துபட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (25) என்பவருக்கும், கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. 8 மாத கர்ப்பிணியாக இருந்த பாஞ்சாலிக்கும், கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பாஞ்சாலியிடம் கூடுதலாக பணம், நகை வாங்கி வரும்படி சதீஷ்குமார் தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனால் அடிக்கடி கோபித்துக்கொண்டு, பெற்றோர் வீட்டிற்கு பாஞ்சாலி செல்வதும், தாயார் சகுந்தலா அவரை சமாதானம் செய்து கணவர் வீட்டிற்கு அனுப்பி வைப்பதும் தொடர் கதையாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 15ம் தேதி மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மனமுடைந்து காணப்பட்ட பாஞ்சாலி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாஞ்சாலியின் தாய் சகுந்தலா தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக, பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் தெரிவித்தார். மேலும் நடவடிக்கை எடுக்க கோரி பாஞ்சாலியின் உறவினர்கள், தர்மபுரி அரசு மருத்துவமனை முன் நேற்று முன்தினம் மறியலில் ஈடுபட்டனர்.இதையடுத்து அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில், பாஞ்சாலியை தற்கொலைக்கு துண்டியதாக, சதீஷ்குமாரை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED குடியரசு தினவிழாவையொட்டி...