₹99.80 லட்சம் மதிப்பில் செங்கன்பசுவந்தலாவ், புலிக்கல் ஏரியில் குடிமராமத்து பணி

தர்மபுரி, ஜூலை 18: பாலக்கோடு அருகே செங்கன்பசுவந்தலாவ் ஏரி, புலிக்கல் ஏரியில் ₹99.80 லட்சத்தில் நடந்து வரும் குடிமராமத்து பணிகளை, கலெக்டர் மலர்விழி ேநரில் ஆய்வு செய்தார். பாலக்கோடு வட்டம், செங்கன்பசுவந்தலாவ் கிராமத்தில் உள்ள செங்கன்பசுவந்தலாவ் ஏரியில் ₹49.80 லட்சம் மதிப்பிலும், புலிக்கல் கிராமத்தில் உள்ள புலிக்கல் ஏரியில் ₹50 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ₹99.80 லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் மலர்விழி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது அவர் கூறுகையில், ‘நடப்பாண்டு அன்னசாகரம் ஏரி ₹70 லட்சம், சோகத்தூர் ஏரி ₹44 லட்சம், கொளகத்தூர் சோழராயன் ஏரி ₹47.50 லட்சம், கொளநாச்சியம்மன் ஏரி ₹36.70 லட்சம், காரிமங்கலம் வட்டம் சிக்கதிம்மனஅள்ளி ஏரி ₹41 லட்சம், அதியமான்கோட்டை ஏரி ₹48 லட்சம், பாலவாடி ஏரி ₹55.50 லட்சம், பனங்கள்ளி ஏரி ₹54.50 லட்சம், புலிக்கல் ஏரி ₹50 லட்சம், செங்கன்பசுவந்தலாவ் ஏரி ₹49.80 லட்சம் என மொத்தம் 10 ஏரிகளில், குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள ₹4.97 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏரிகளில் சீமை கருவேல மரங்களை அகற்றுதல், கரையை பலப்படுத்துதல், உபரிநீர் வழியை சீரமைத்தல், பாசன வாய்க்காலை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாய பயன்பாட்டிற்கு, வண்டல் மண் தேவைப்படுவோர், சம்மந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர், தாசில்தார் ஆகியோரை அணுகலாம்,’ என்றார். இந்த ஆய்வின் போது, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு உதவி பொறியாளர் சாம்ராஜ், தாசில்தார் வெங்கடேஸ்வரன் மற்றும் பாசன சங்க விவசாயிகள் உடனிருந்தனர்.

Tags :
× RELATED கொள்ளை முயற்சி எதிரொலி அனைத்து வங்கிகளிலும் கண்காணிப்பு கேமரா