குடிமராமத்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் ஆலோசனை

திருப்பூர், ஜூலை 18:திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடிமராமத்து திட்டப்பணி தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளுடனான ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனிசாமி முன்னிலை வகித்தார். பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளர் பாலாஜி தலைமை வகித்து பேசியதாவது: தமிழகத்தில் நீராதாரங்களை செம்மைப்படுத்தி, விவசாயிகள் பயன்பெறும் வகையில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுப்பணித்துறை - நீர்வள ஆதாரத்துறை மூலம் பதிவு பெற்ற பாசன சங்கங்கள், நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள், பாசனதாரர்கள்  வாயிலாக இந்த பணிகளை செயல்படுத்திட அரசு வழிமுறைகள் வழங்கியுள்ளது. இத்திட்டத்தில் கால்வாயில் வளர்ந்துள்ள செடிகொடிகள் முட்புதர்களை அகற்றுதல், கால்வாயினை தூர்வாரி சுத்தம் செய்தல். கால்வாயில் சேதமடைந்துள்ள குறுக்கு கட்டங்களை பழுது பார்த்தல், பழுதடைந்த மடைகளை சீரமைத்தல், பழுதடைந்த ஷட்டர்களை புதுப்பித்தல், கால்வாய் கரைகளை பலப்படுத்துதல். குளங்களின் கரைகளை பலப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.  மேலும் நடப்பு ஆண்டிற்கு தமிழகம் முழுவதும் 1829 பணிகள் ரூ.499.68 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு வடிநிலக் கோட்டத்தின் வாயிலாக 53 பணிகள் ரூ.6 கோடியிலும், திருமூர்த்தி கோட்டத்தின் வாயிலாக 54 பணிகள் ரூ.4 கோடியிலும், பவானி வடிநிலக் கோட்டத்தின் வாயிலாக 5 பணிகள் ரூ.86 லட்சத்திலும் மற்றும் அமராவதி வடிநில கோட்டத்தின் வாயிலாக 22 பணிகள் ரூ.3 கோயிலும் என 134 பணிகள் ரூ.15 கோடியில் செயல்படுத்திட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 குடிமராமத்துப் பணிகள் மூலம் திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம், காங்கயம், திருப்பூர் தெற்கு வட்டங்களில் 1,33,663 ஹெக்டர் பாசன நிலங்கள் பயன்பெறும். மேலும், “பங்கேற்பு பாசன மேலாண்மை”யில் விவசாயிகள் தங்களை ஈடுபடுத்தி பங்களிப்பாக மதிப்பீட்டுத் தொகையில் 10 சதவீதம் பணமாகவோ, மனித உழைப்பாகவோ அல்லது பொருளாக வழங்கிடவும் 90 சதவீதம் அரசின் நிதியாகவும் கொண்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், தாராபுரம் சப் கலெக்டர் பவன்குமார் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் இந்திரவள்ளி,  கண்காணிப்பு பொறியாளர்கள் சண்முகம், முத்துச்சாமி, செயற்பொறியாளர்கள் தர்மலிங்கம், தாமோதரன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: