×

வாசனை திரவிய பூங்காவை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் கூடலூர் திமுக எம்எல்ஏ கோரிக்கை

கூடலூர், ஜூலை18:கூடலூர் தொகுதியில் உள்ள வாசனை திரவிய பூங்காவை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என்று கூடலூர் திமுக எம்எல்ஏ கோரிக்கை விடுத்தார்.  சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது கூடலூர் திராவிடமணி (திமுக) பேசியதாவது:  கூடலூர் தொகுதியில் பொன்னூரில் உள்ள வாசனை திரவிய பூங்காவை சுற்றுலா தலமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்: தோட்டக்கலை சார்பில் 2011ம் ஆண்டு தொடங்கப்பட்டு, இப்பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு பல ஏக்கர் நிலப்பரப்பில் கிராம்பு, பட்டை உள்ளிட்ட வாசனை திரவியங்கள் பயிரிடப்பட்டு உள்ளது. இங்கு விலங்குகள் நடமாட்டம் உள்ளதால், இதை சுற்றுலா தலமாக அறிவிக்க வாய்ப்பில்லை.

 திராவிடமணி: இங்கு விலங்கு தொல்லை உள்ளதாக கூறுகிறீர்கள். இப்பூங்காவை ஒட்டி அகழிகள் கட்டப்பட்டு உள்ளன. அந்த அகழிகளை தூர்வாரினாலே, யானை போன்ற விலங்குகள் உள்ளே வர வாய்ப்பில்லை. இதை சுற்றியுள்ள பகுதிகளை ஒருங்கிணைத்தால் ஒரு சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும். தற்போது இங்கு வரும் சுற்றுலா பயணிகள், கேரள மாநிலம் வயநாட்டுக்கு செல்லும் நிலை உள்ளது. இப்பூங்காவை சுற்றுலா தலமாக அறிவித்தால், இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவு வரும் வாய்ப்பு உள்ளது. அங்குள்ள நீர்பிடிப்பு பகுதியில் படகு குழாம் ஒன்றை அமைக்க வேண்டும். ஊட்டியில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி தமிழக அரசு சார்பில் சிறப்பாக நடத்தப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் நடைபெற்று வந்த வாசனை திரவிய கண்காட்சி இந்த ஆண்டு ஏன் நடத்தவில்லை?
 அமைச்சர் நடராஜன்: ஊட்டியில் படகு சவாரி வசதிகள் செய்யப்பட்டு, அங்கு 133 படகுகள் உள்ளன. பைக்காரா ஏரியில் 22 அதிவேக படகுகளும் உள்ளது. எனவே, இங்கு சுற்றுலா பயணிகள் அதிக உற்சாகத்துடன் பயணிக்கின்றனர். இங்கு சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளதால் தான், ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தேர்தல் காலமாக இருந்ததால் இந்த ஆண்டு வாசனை திரவிய கண்காட்சி நடத்தப்படவில்லை.



Tags :
× RELATED மேட்டுப்பாளையம் வாக்குச்சாவடி மையத்தில் மேற்கு மண்டல ஐஜி நேரில் ஆய்வு