×

ஈரோடு அரசு மருத்துவமனை மல்டி ஸ்பெசாலிட்டியாக தரம் உயர்வு

ஈரோடு, ஜூலை 18:     ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை 1956ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகள் சிகிச்சை பெற 608 படுக்கை வசதி உள்ளது. இங்கு, ஆண்கள், பெண்கள் சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, கண் சிகிச்சை, மன நோயாளிகள் சிகிச்சை, காசநோய் பிரிவு, எம்ஆர்ஐ., ஸ்கேன் வசதி, டையாலிஸ் மற்றும் ஹெச்.ஐ.வி., தொற்று நோய் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட சிகிச்சை பிரிவுகள் உள்ளன. ஈரோடு அரசு மருத்துவமனைக்கு மாவட்டத்தின் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த நோயாளிகளும், அண்டை மாவட்டங்களாக கரூர், நாமக்கல், திருப்பூர் போன்ற பகுதியை சேர்ந்த மக்களும் சிகிச்சைக்கு வருகின்றனர்.  இதனால் தினசரி உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். பொதுவாக மழைக்காலங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். மேலும், விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய நவீன வசதிகள் இல்லாததால் பெரும்பாலும் அவசர சிகிச்சை பிரிவில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கோவை, சேலம் மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தனர். இதனால் அதிநவீன மருத்துவ வசதிகளை ஈரோடு அரசு மருத்துவமனையிலும் உருவாக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

 தமிழக சட்டசபை கூட்டத்தில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு அரசு மருத்துவமனையை மல்டி ஸ்பெசாலிட்டியாக தரம் உயர்த்தப்படும் என 110 விதியின் கீழ் அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு ஈரோடு மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
 இதுகுறித்து ஈரோடு மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ரமாமணி கூறியதாவது: அரசு மருத்துவமனையில் தற்போது பல்வேறு நேய்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. மல்டி ஸ்பெசாலிட்டியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், கார்டியாலஜிஸ்ட், நியூரியாலஜிஸ்ட், பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்ட அறுவை சிகிச்சை பிரிவுக்கு பரிந்துரை செய்துள்ளோம். என்றார்.


Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...