இஎஸ்ஐ மருத்துவமனையில் ஒரு மாதமாக செயல்படாத லிப்ட்

கோவை, ஜூலை 18:  கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் டெண்டர் புதுப்பிக்காத காரணத்தினால் கடந்த ஒரு மாதமாக லிப்ட்கள் செயல்படாத நிலையில் இருக்கிறது. இதனால், நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

 கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரத்தில் கடந்த 2016ம் ஆண்டு ரூ.520 கோடி மதிப்பில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டப்பட்டது. இதில், புறநோயாளிகள், உள்நோயாளிகள், 24 மணி நேரமும் செயல்படும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு செயல்படுகிறது. மருத்துவ கல்லூரியுடன் இணைந்த இந்த மருத்துவமனையில் 17 பொதுதுறைகள், 14 சிறப்பு மருத்துவ துறைகள் என மொத்தம் 31 துறைகள் உள்ளது.  இந்த மருத்துவமனையில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய 4 மாவட்ட தொழிலாளர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு தினமும் 1,200 பேர் புற நோயாளிகளாகவும், 400 பேர் உள்நோயாளிகளாவும் சிகிச்சைக்கு வருகின்றனர்.
Advertising
Advertising

நோயாளிகள், மருத்துவர்கள் பயன்படுத்தும் வகையில் மருத்துவமனையில் 17 லிப்ட்கள் உள்ளது. இதில், மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு செயல்படும் கட்டிடத்தில் மட்டும் 4 லிப்ட்கள் உள்ளன. இந்த லிப்ட் பராமரிக்கும் பணி தனியார் வசம் உள்ளது.  இந்நிலையில், கடந்த ஒரு மாதகாலமாக இஎஸ்ஐ மருத்துவமனையில் 4 லிப்ட்கள் பழுதடைந்துள்ளது. டெண்டர் புதுப்பிக்கவில்லை என காரணம் காட்டி, இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கடந்த ஒரு மாதமாக நோயாளிகள், உறவினர்கள், மருத்துவர்கள் படிக்கட்டுகளையே பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவமனையின் ஆர்.எம்.ஓவிடம் நோயாளிகள் பலர் புகார் தெரிவித்தனர்.   இதுகுறித்து மருத்துவமனையின் ஆர்எம்ஓ கூறுகையில், “லிப்ட் பராமரிப்பு பணியில் சிக்கல் இருந்தது. நோயாளிகள், மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று லிப்ட் சீரமைக்கும் பணிகள் நடக்கிறது. இது போன்ற சிக்கல் மீண்டும் வராமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Related Stories: