மக்கள் பயன்பாட்டிற்கு காந்தி பூங்கா அடுத்த மாதம் திறக்கப்படும்

கோவை, ஜூலை 18:  கோவை காந்தி பார்க் பகுதியில் 2.5 கோடி ரூபாய் மதிப்பில் செயற்கை நீர் ஊற்றுகளுடன் காந்தி பூங்கா சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பூங்கா அடுத்த மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவை மாநகராட்சி 24 வார்டு பகுதிக்குட்பட்ட காந்தி பார்க் பகுதியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது காந்தி பூங்கா. கோவை மாநகர மக்கள் விடுமுறை நாட்களுக்கு கோவை வ.உ.சி பூங்காவிற்கு அடுத்து காந்தி பூங்காவிற்கு வருகின்றனர்.  இந்நிலையில் காந்தி பூங்காவை சீரமைக்க மத்திய அரசின் அம்ரூத திட்டத்தின் கீழ் 2.5 கோடி செலவில் மாநகராட்சி சார்பாக அங்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. புதிதாக கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் ஓய்வு எடுக்க ஆங்காங்கே மேற்கூரைகள் வசதிகளுடன் நவீன இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது, பூங்காவுக்குள் நுழைந்ததும் இடது  புறத்தில் செயற்கை அருவி இயற்கையாகவே இருப்பது போன்று தத்ரூபமாக  அமைக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்து பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘கடந்த ஜனவரி மாதம் சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டது. பிப்ரவரி மாதம் பணிகள் காரணமாக பூங்கா மூடப்பட்டது. தற்போது 90 சதவீத சீரமைப்பு பணிகள் முடிவடைந்துவிட்டன. அடுத்த மாதம் இந்த பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்,’’ என தெரிவித்தார்.


Tags :
× RELATED கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகளுக்கு தேர்தல் நாளை முதல் வேட்பு மனு தாக்கல்