சிங்காநல்லூர் குளத்தை மேம்படுத்தும் பணி விரைவில் துவக்கம்

கோவை, ஜூலை 18:  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை சிங்காநல்லூர் குளத்தை மேம்படுத்தும் பணி விரைவில் துவங்கவுள்ளது.  மத்திய அரசு கடந்த 2015ல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் சென்னை, கோவை உள்பட நாடுமுழுவதும் 20 மாநகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டது. மேலும், திட்டத்திற்கு முதல் ஆண்டில் மத்திய, மாநில அரசு சார்பில் ரூ.200 கோடி, அடுத்த 4 ஆண்டுகளுக்கு தலா ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி குளங்களை மேம்படுத்துதல், மாதிரி சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது.

Advertising
Advertising

 இதில், கோவை மாநகராட்சியில் குளங்களை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் எடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், செல்வசிந்தாமணி, சிங்காநல்லூர் உள்பட 8 குளங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், தற்போது உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம், செல்வசிந்தாமணி குளங்களின் கரைப்பகுதிகள் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.  இதனை தொடர்ந்து சிங்காநல்லூர் குளத்தை மேம்படுத்தும் பணிகள் விரைவில் துவங்கவுள்ளது. இதற்கான டெண்டர் இம்மாத இறுதியில் அளிக்கப்படுகிறது. பின்னர், குளத்தை சுற்றியுள்ள சுமார் 4 கிலோ மீட்டர் கரைப்பகுதி மேம்படுத்தப்படும். நடைபாதை, சைக்கிள் பாதை, ஸ்மார்ட் பெஞ்ச், எல்இடி பல்புகள், பூங்கா, பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும், நீண்ட நாட்களாக செயல்படுத்தாமல் உள்ள சிங்காநல்லூர் படகு இல்லம் மீண்டும் துவங்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: