×

கொப்பரை கொள்முதல் விதிமுறைகளை தளர்த்த விவசாயிகள் கோரிக்கை

ஈரோடு, ஜூலை 18:   ஈரோடு மாவட்டத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கு கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளதால், விதிமுறைகளை தளர்த்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   தமிழகத்தில் தென்னை விவசாயிகள் உற்பத்தி செய்யும் கொப்பரை தேங்காய்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையங்கள் மூலமாக தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக இந்த ஆண்டு குறைந்தபட்ச ஆதார விலையை அரசு அறிவித்துள்ளது. அதன்படி அரவை கொப்பரை தேங்காய் கிலோ ரூ.95.21க்கும், பந்து கொப்பரை தேங்காய் கிலோ ரூ.99.20க்கும் கொள்முதல் செய்யப்படவுள்ளது.  ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையங்களான அவல்பூந்துறையில் வெள்ளிகிழமை, எழுமாத்தூர், கொடுமுடி பகுதியில் திங்கள்கிழமை, கோபியில் வியாழக்கிழமை, சத்தியமங்கலத்தில் செவ்வாய்கிழமைகளில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.    மேலும் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய விவசாயிகள் நிலம், சிட்டா, ஆதார், வங்கி கணக்கு புத்தகம், அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை அந்தந்த பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அளிக்க வேண்டும் என அறிவிப்பட்டது. மேலும் கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்ய வரும் விவசாயிகள் தேங்காயின் ஈரப்பதம், சுற்றளவு, பூஞ்சாணம், கருமை நிறம் கொண்ட கொப்பரை, சுருக்கம் கொண்ட கொப்பரை, சில்லுகள் போன்றவற்றிற்கு விதிமுறைகள் கடுமையாக விதிக்கப்பட்டுள்ளது.  விதிமுறைகளின்படி இருந்தால் மட்டுமே கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கடந்த 15ம் தேதி முதல் ஜனவரி 6ம் தேதி வரை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படும் என அறிவித்தனர். ஆனால் விதிமுறைகள் கடுமையாக உள்ளதால், இதுவரை ஒரு கிலோ கொப்பரை கூட கொள்முதல் செய்யப்படவில்லை.

 இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கொப்பரை தேங்காயை சொசைட்டிக்கு கொண்டு வந்து விற்க ஒழுங்குமுறை விற்பனை கூடம் கடுமையான விதிகளை விதித்துள்ளனர். அவர்கள் கூறும் விதிமுறைப்படி கொப்பரை விளைவிக்க முடியாத நிலை உள்ளது. விதிகளை தளர்த்தி அனைத்து ரகங்களையும் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.  இதுகுறித்து மாவட்ட விற்பனைக்குழு செயலாளர் சின்னசாமி கூறியதாவது: கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வதற்கு அனைத்து ஆவணங்களும் உள்ள விவசாயிகள் 70 பேர் இதுவரை பதிவு செய்துள்ளனர். கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடர்பாக விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை விவசாயிகள் யாரும் கொள்முதல் செய்யவில்லை. அரசு விதித்துள்ள விதிமுறையை தான் நாங்கள் இங்கு பின்பற்றுகிறோம். விவசாயிகள் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.


Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை