×

ராஜபாளையத்தில் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பால் அடையாளம் இழக்கும் கண்மாய்

ராஜபாளையம், ஜூலை 18: ராஜபாளையத்தில் பஸ்நிலையம் எதிரே, ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பால், அடையாளம் இழந்து வரும் கண்மாயில் குடிமராமத்து பணி செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜபாளையத்தில் புதிய பஸ்நிலையம் எதிரே புதியாதி கண்மாய் உள்ளது. இக்கண்மாய் மூலம் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. இந்நிலையில், கண்மாய் முழுவதும் ஆகாயத்தாமரைகள் படர்ந்து ஆக்கிரமித்துள்ளன. நகரில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், இக்கண்மாயில் கலப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. கழிவுநீரில் கொசுக்கள் உருவாகின்றன. கண்மாயில் கழிவுநீர் கலப்பதால், நிலத்தடி நீரும் மாசுபடுகிறது. இதனைச் சுற்றியுள்ள கிணறுகள், ஆழ்குழாய்களில் உள்ள நீரின் தன்மை மாறுகிறது. கண்மாய் நீரை குடிக்கும் ஆடு, மாடுகளுக்கும் நோய் ஏற்படுகிறது. இதனை தூர்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

சில மாதங்களுக்கு முன், தொண்டு நிறுவனங்கள் தூய்மைப் படுத்தும் பணியை மேற்கொண்டனர். ஆனால், இப்பணி தொடரவில்லை. அதிகாரிகள் மாற்றம் காரணமாக, கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரையை உயர்த்தி, ஆகாயத்தாமரை மற்றும் கழிவுகளை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நகரில் உள்ள ஓரிரு கண்மாய்களுக்கு குடிமராமத்து பணி மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, ராஜபாளையத்தில் புதிய பஸ்நிலையம் எதிரே உள்ள புதியாதி கண்மாயில், ஆகாயத்தாமரைகளை அகற்றி, கரையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags :
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...