×

வத்திராயிருப்பில் பராமரிப்பின்றி கழிப்பறை பாழ் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

வத்திராயிருப்பு, ஜூலை 18: வத்திராயிருப்பில் பராமரிப்பு இல்லாத மகளிர் கழிப்பறையை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பு பேரூராட்சியில் உள்ள வணிக வைசியர் பலகுடி கீழத்தெருவில் மகளிர் கழிப்பறை உள்ளது. இக்கழிப்பறையை 9, 10 மற்றும் 11வது வார்டுகளைச் சேர்ந்த பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். இக்கழிப்பறை போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. கழிப்பறையில் மின்விளக்கு இல்லை. கோப்பைகள் உடைந்த நிலையில் உள்ளது. அறைகளுக்கு கதவுகள் இல்லை. கழிப்பறை பயன்பாட்டுக்கு தனி ஆழ்துளை கிணறு உள்ளது. இதில் பல மாதங்களாக தண்ணீர் இல்லை. இதனால், அருகில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் சப்ளை செய்கின்றனர். தொட்டியில் இருந்து தண்ணீர் வராவிட்டால் கழிப்பறைக்கு செல்ல முடியாது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் மகளிர் கழிப்பறைக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து திமுகவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் மாரிமுத்து கூறுகையில், ‘கழிப்பறையை பராமரிப்பது தொடர்பாக பலமுறை பேரூராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால், நடவடிக்கை இல்லை. கழிப்பறை அருகில் உள்ள குடிநீர் தொட்டிக்கு சுவிட்ச் போர்டு திறந்தவெளியில் உள்ளது. இதில் யாராவது கை வைத்தால், மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது. இதற்கு மூடி போட வேண்டும். கழிப்பறையை பராமரிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், பேரூராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவோம்’ என்றார்.


Tags :
× RELATED தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்...