×

திருச்சுழி அருகே குண்டாற்று பாலத்தில் தடுப்புகள் சேதம்

திருச்சுழி, ஜூலை 18: திருச்சுழி அருகே, குண்டாற்றுப் பாலத்தில் சேதமடைந்த தடுப்புகளால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த தடுப்புகளை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் இருந்து திருச்சுழி, நரிக்குடி வழியாக ராமேஸ்வரம் செல்லும் சாலை போக்குவரத்து மிகுந்த சாலையாகும். இந்த சாலை வழியாக ஆயிரகணக்கான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் திருச்சுழியையொட்டி, குண்டாற்றில் 58 ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்டப்பட்டது. இந்நிலையில், தற்போது பாலத்தின் இருபுறமும் உள்ள தடுப்பு பில்லர்கள் உடைந்துள்ளன. இதனால், இரவு நேரங்களில், எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடுவதற்காக ஒதுங்கும் டூவீலர்கள், ஆற்றுக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. மேலும், பாலத்தில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாலத்தின் இருபுறமும் தடுப்பு பில்லர்கள் அமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து திருச்சுழியைச் சேர்ந்த வீரபாண்டி கூறுகையில், ‘திருச்சுழியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் குண்டாற்றில் பாலம் உள்ளது. இந்த பாலம் 1960க்கு முன், தரைப்பாலமாக இருந்தது. ஆற்றில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டதால், 1961ல் மேம்பாலம் கட்டப்பட்டது. தற்போது பாலத்தின் இருபுறமும் உள்ள தடுப்பு பில்லர்கள் உடைந்துள்ளன. இதனால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும்போது ஆற்றில் விழும் அபாயம் உள்ளது. பாலத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு, இருபுறமும் தடுப்பு பில்லர்கள் அமைக்க வேண்டும்’ என்றார்.

Tags :
× RELATED செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சிக்கு...