×

தேனியில் ரூ.100 கோடி ேமம்பாலத்தால் நெரிசலுக்கு விடிவு கிடைக்குமா?



மாவட்டம்
தேனி, ஜூலை 18:  தேனியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரூ.100 கோடியில் மேம்பாலம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தால் தேனி மாவட்டத்தின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேனி வர்த்தக நகராகவும், கல்விநகராகவும் மாறியுள்ளதால் மாவட்டத்தின்  பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேனிக்கு ஏராளமானோர் குடியேறி உள்ளனர். இதனால் தேனியில் மக்கள் தொகை 1 லட்சத்தை தாண்டிவிட்டது. தேனி தவிர இதன்அருகில் உள்ள ஊஞ்சாம்பட்டி, பழனிசெட்டிபட்டி, அரண்மனைப்புதூர், பூதிப்புரம் உள்ளிட்ட பகுதிகள் வரை தேனி நகரம் விரிவாக்கம் அடைந்துள்ளது. இதனால் தேனி நகரில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் உள்ளது.

தேனியில் முக்கிய சாலையாக மதுரைசாலை, பெரியகுளம் சாலை, கம்பம் சாலை உள்ளது. இச்சாலையில் காலை மற்றும் மாலைநேரத்தில் போக்குவரத்து வாகனங்களால் சாலையை கடக்க முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் உள்ளது. இதனால் தேனியில் இம்மூன்று சாலைகளிலும் மேம்பாலம் அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை இருந்து வந்தது. தற்போது சட்டமன்ற கூட்டத் தொடரின் நெடுஞ்சாலை மானியக் கோரிக்கையின்போது, தேனியில் சுமார் ரூ.100 கோடி மதிப்பீட்டில் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி விரைவில் நடக்க உள்ளது.  இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் விசாரிக்கையில், `` தேனி நகரில் பெரியகுளம் சாலையில் ரயில்வே கேட் அருகில் இருந்து துவங்கி 6 மீட்டர் உயரத்தில் பாலம் அமைக்கப்பட உள்ளது. இப்பாலம் 12 மீட்டர் அகலத்தில் கட்டப்பட உள்ளது. இப்பாலம் கொட்டக்குடி ஆற்றுக்கு முன்புறம் திட்டச்சாலை சந்திப்பில் முடிவடையும், மேலும், இப்பாலத்தொடர்ச்சி நேரு சிலை அருகே பிரிந்து மதுரை சாலையில் சென்று பழைய பஸ்நிலையம் நுழைவுவாயில் அருகே நிறைவடையும் வகையில் கட்டப்பட உள்ளது. பாலத்திற்கு கீழ் பகுதியில் இருபுறமும் வாகனங்கள் சென்று வரும் வகையில் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட உள்ளது.

மேலும், வாரச்சந்தைக்கு காய்கறிகள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், பழைய பஸ்நிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள் பாலத்தின்மீது ஏறும்வகையில் சாய்தள மேம்பாலமும் அமைக்கப்பட உள்ளது. மொத்தம் இச்சாலை 1200 மீட்டர் நீளம் கட்டப்பட உள்ளது. இப்பாலம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணி விரைவில் துவங்கப்பட உள்ளது. இப்பணி ஓரிரு மாதத்தில் முடிவடைந்து மூன்று மாத காலத்திற்குள் பாலம் கட்டும் பணி நடக்க துவங்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது’’ என்றனர். தேனி நகர வர்த்த பிரமுகர்கள், அரசியல் கட்சியினருடன் ஆலோசித்து   போக்குவரதது நெருக்கடி இல்லாமல் பாலத்தை அமைப்பதற்கான நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்