×

மழைநீர் சேமிப்பு திட்டவிழா மரம் வளர்க்க தண்ணீருக்கு நாங்கள் எங்கே போவது?

சின்னமனூர், ஜூலை 18: மழை பெற மரம் வளர்க்க வேண்டும் என்று கலெக்டர் பேசியதற்கு, மரம் வளர்க்க தண்ணீருக்கு நாங்கள் எங்கே போவது என்று பெண்கள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூரில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மழைநீர் மேலாண்மை திட்டம் துவக்க விழா நேற்று நடைபெற்றது. எரசக்கநாயக்கனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் குழி தோண்டி வேப்பமரக்கன்றினை நட்டு தண்ணீர் ஊற்றி  மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.அப்போது அவர் பேசியதாவது:  மழை வளம் குறைந்துள்ளதால் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் மழைநீர் சேமிப்பு தொட்டிகள் கட்டாயம் அமைக்க வேண்டும். மழை வளம் பெற எல்லோரும் மரக்கன்றுகள் நட்டு வைத்து வளர்க்க வேண்டும் என்று பேசினார்.

அப்போது சில பெண்கள் எழுந்து, மரக்கன்று வளர்க்க தண்ணீருக்கு நாங்கள் எங்கே போவது என்று கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கலெக்டர் திகைத்து போனார். அப்போது  மகளிர் குழு தலைவி ஒருவர், கேள்வி எழுப்பிய பெண்களிடம், மழை வளம் குறைத்திருப்பதற்கு மரங்கள் இல்லாதது தான் காரணம். மரங்களை வெட்டி அழித்து விட்டோம். மரம் வளர்த்தால் தான் மழை பெற முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, மழைநீர் கட்டி மழை நீரை சேமிக்க வேண்டும் என்று பேசி சமாளித்
தார்.பின்னர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்  கலெக்டர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் பல இடங்களில் மழைநீர் சேமிப்பு தொட்டிகளை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் உள்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு