×

குப்பை அடைத்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது கால்வாய்களை சுத்தம் செய்ய வேண்டும் மக்கள் வலியுறுத்தல்

காரைக்குடி, ஜூலை 18: காரைக்குடியில் கால்வாய்கள் அடைத்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் தொற்றுநோய்கள் பரவ வாய்ப்புள்ளதால் கால்வாய்களை சுத்தப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காரைக்குடி நகராட்சியில் கழிவுநீர் கால்வாய், மழைநீர் கால்வாய்களை ஆக்கிரமித்து கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் மற்றும் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை சுத்தப்படுத்த எந்த முயற்சியும் நகராட்சி நிர்வாகம் எடுக்கவில்லை. டாஸ்மாக் பார்கள், கையேந்தி பவன்களின் கழிவுகளை கால்வாய்களில் கொட்டுகின்றனர். இதனால் கழிவுநீர் முறையாக செல்ல முடியாமல் தேங்கி கிடக்கிறது. சில பகுதிகளில் கால்வாய் இல்லாததால் தெருக்களில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. அப்பார்ட்மெண்டுகள், லயன் வீடுகளில் முறையாக கழிவு நீர் செல்ல வசதி ஏற்படுத்தப்படவில்லை. முறையாக கழிவுநீர் செல்ல வழியில்லாததால் கொசு, ஈ அதிகரித்துள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. காய்ச்சல் பரவும் போது மட்டும் அதிகாரிகள் கண்துடைப்பாக நடவடிக்கைகளில் இறங்குவார்கள். அதன்பிறகு வழக்கம்போல் கண்டுகொள்ளாமல் மெத்தனமாக செயல்படுவது வாடிக்கையாகி உள்ளது.

தற்போது மழைகாலம் துவங்கி உள்ள நிலையில் ஆங்காங்கே கழிவுநீர் கால்வாய்கள் அடைத்து சாலைகளில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சமூகஆர்வலர் வெங்கட்பாண்டி கூறுகையில், கொசு மருந்து அடிப்பது இல்லை. கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்வது கிடையாது. பெரும்பாலான இடங்களில் குளம்போல் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. நகர் பகுதியில் 35 சதவீத இடங்களில் தான் கழிவுநீர் கால்வாய்கள் உளன. கழிவுநீர் வெளியேறும் வகையில் முறையாக கால்வாய் கட்டப்படவில்லை. முன்பு வாரம் இரண்டு முறை புகை, மருந்து அடிப்பார்கள் தற்போது இந்த நடைமுறை காணாமல் போய்விட்டது என்றார்.


Tags :
× RELATED உலக புத்தக தின விழா