கண்டுகொள்ளாத அதிகாரிகள் கிணற்றை தூர்வாரிய குலையனூர் மக்கள்

மானாமதுரை, ஜூலை 18: மானாமதுரை அருகே குடிநீர் பிரச்சனையை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தீர்க்க முன்வராததால் கிராமத்தினரே கிணற்றை தூர்வாரி குடிநீர் எடுத்தனர்.மானாமதுரை அருகே சூரக்குளம் பில்லறுத்தான் ஊராட்சிக்குட்பட்டது குலையனூர் கிராமம். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மானாமதுரை ஒன்றியத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போல இங்கும் குடிநீர் தரும் கண்மாய், குளங்கள் வற்றி கிடக்கின்றன. பக்கத்து கிராமங்களுக்கு சென்றாலும் அங்கும் கிராமத்தினருக்கு போதுமான குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் வீடுகளில் தினமும் சமையலுக்கும், குடிப்பதற்கும் பல கிலோமீட்டர் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

இது குறித்து மானாமதுரை ஊராட்சிஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து கிராமத்தினரே குடிநீர் கிணற்றை தூர்வார முடிவு செய்தனர். கிராமத்தில் கூட்டம் போடப்பட்டு வீட்டுக்கு ஒருவர் கிணற்றை தூர்வாரும் வேலைக்கு செல்வது என்று முடிவெடுத்தனர். இதன்படி கிராமமக்கள் கடந்த மூன்று நாட்களாக கிணற்றை சுத்தம் செய்து வந்தனர். இதன் பலனாக நேற்று கிணற்றில் நல்ல குடிநீர் ஊறியது. இதனால் கிராமத்தினருக்கு தற்காலிகமாக குடிநீர் தட்டுப்பாடு தீர்ந்துள்ளது.
இது குறித்து குலையனூரை சேர்ந்த ரவி கூறுகையில், கடந்த இரண்டு மாதங்களாக எங்கள் கிராமத்தினருக்கு போதுமான குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் அருகில் உள்ள கிராமங்களில் சென்று குடிநீர் எடுத்தோம். அங்கும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவித்தோம். நடவடிக்கை இல்லை என்பதால் கிராமத்தினரே கிணற்றை தூர்வாரியுள்ளோம். இந்த குடிநீர் போதுமான இல்லை என்றாலும் தாகத்தை தீர்க்க உதவும். எனவே கிராமத்திற்கு நிரந்தரமாக நல்ல தண்ணீர் கிடைக்க குடிநீர் போர்வெல் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags :
× RELATED இளையான்குடி பகுதியில் பல ஆண்டுகளாக பாசன மடைகள் சேதம்