அடிப்படை வசதியில்லாத நிலையிலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

ராமநாதபுரம், ஜூலை 18:  அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளை விட அதிகமான மாணவர்கள் சேர்ந்து படிக்க ஆர்வம் காட்டியது ஆய்வில் தெரியவந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1,528 பள்ளிகள் உள்ளன. இதில் 2.33 லட்சம் மாணவ,மாணவியர் படித்து வருகின்றனர். கடந்த 2018-19ம் ஆண்டுகளில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 78,367 பேர் சேர்ந்து படித்துள்ளனர். நடப்பு ஆண்டில் ஜூன் வரை 80,218 பேர் சேர்ந்துள்ளனர். கடந்த 2018ல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 59,905 பேர் சேர்ந்த நிலையில், நடப்பு ஆண்டில் 58,818 பேர் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பு ஆண்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1,087 மாணவ, மாணவியர் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. மெட்ரிக்குலேசன் உள்ளிட்ட தனியார் பள்ளிகளில் 2018ம் ஆண்டில் 95,065பேர் சேர்ந்து படித்துள்ளனர். நடப்பு ஆண்டில் 88,605 பேர் படித்து வருகின்றனர். அதனடிப்படையில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையானது கடந்த 2018ம் ஆண்டை விட 2019ம் ஆண்டில் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. 10 மற்றும் 12 வகுப்புகளை விட நடப்பு ஆண்டில் அரசு பள்ளிகளில் 1,3,8 ஆகிய வகுப்புகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பதும் தெரியவந்துள்ளது. கடந்த 2018ல் அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் 6,337 பேர் சேர்ந்த நிலையில், 2019 ல் 6,422 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். பிளஸ்2 வகுப்பில் 2018ல் 5,581 பேர் படித்த நிலையில், தற்போது 5,151 பேர் மட்டுமே சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்புகளில் கடந்த 2018ல் 7,007 பேர் சேர்ந்த நிலையில், நடப்பு ஆண்டில் 6,218 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். பிளஸ் 2 வகுப்புகளில் 2018ம் ஆண்டில் 5,716 பேர் சேர்ந்த நிலையில், நடப்பு ஆண்டில் 6,317 பேரும் சேர்ந்துள்ளனர். அரசு பள்ளில் எமிஸ் சாப்ட்வேர் மூலமாக மாணவர் எண்ணிக்கை தற்போது கணக்கிடப்பட்டு வருகிறது. ஜூலை மாதம் வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதால், ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளிகளில் சேரும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை கூடுதலாக வாய்ப்பு உள்ளதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.ஆய்வக வசதியில்லைஆசிரியர் கூறுகையில், அரசு பள்ளியில் மாணவர்களுக்கு புரியும் வகையில் சொல்லி தருகின்றனர். பல பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் அனைத்து தேவைக்கும் மற்றவர்களை நாடியே உள்ளது. குடிநீர், கழிப்பறை மாணவர்கள் எண்ணிக்கைக்கு எற்ற வகையில் இல்லாவிடிலும் குறைந்த அளவிலாவது இருக்க வேண்டும். கழிப்பறைகளை சுத்தம் செய்ய போதுமான பணியாளர்கள் இல்லை. சில பள்ளிகளில் ஆசிரியர்களே சுத்தம் செய்யும் அவலநிலை உள்ளது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வுகூடம் பல பள்ளிகளில் இல்லை, ஆய்வு கூடம் இல்லாத பள்ளிகளில் அறிவியல் தொடர்பான பாடங்களை மாணவர்களுக்கு எப்படி கற்றுக்கொடுப்பது. கிராமங்களிலிருந்து நகர்புறத்திற்கு வரும் மாணவர்கள் காலை நேரத்தில் பஸ்சில் தொங்கியபடியே பயணம் செய்கின்றனர். அரசு இலவச பாஸ் வழங்கியிருந்தாலும் போதுமான பஸ்கள் இயக்கப்படாத நிலையில் மிகவும் சிரமப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர். அரசு பள்ளியில் புத்தகங்கள் இலவசமாக வழங்குகின்றனர். ஆனால் பள்ளி துவங்கும் போது வழங்காமல் உள்ளதால் பல நாட்கள் மாணவர்கள் பாடம் நடத்தாமல் பொழுதை கழிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் அனைத்து அரசு பள்ளிகளிலும் அடிப்படை தேவைகள் என்ன என்பது பற்றி கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags :
× RELATED தமுமுக குற்றச்சாட்டு அதிக மகசூல்...