×

கடலாடி, முதுகுளத்தூர் பகுதியில் மிதமான மழைக்கே உழவில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்




சாயல்குடி, ஜூலை 18:  பருவ மழை துவங்க உள்ள நிலையில் தரிசாக கிடக்கும் விவசாய நிலங்களை சீரமைத்து, உழவு பணியில் விவசாயிகள் ஆர்வம்காட்டி வருகின்றனர். கடலாடி, முதுகுளத்தூர் சுற்று வட்டார பகுதியில் நேற்று முன்தினம் மிதமான மழை பெய்தது. கேரளா பகுதியில் தென்மேற்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், அதன் தாக்கம் நாகர்கோயில், குற்றாலம் முதல் ராமநாதபுரம், தொண்டி வரை இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மிதமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் நம்புகின்றனர். இந்நிலையில் கடந்தாண்டிற்கான பயிர்காப்பீட்டு இழப்பீடு தொகையை ஒரு சில பகுதி விவசாயிகளை தவிர பெரும்பான்மையான விவசாயிகள் வங்கிகளில் பெற்று வருகின்றனர். விவசாயம் செய்யாமல், சீமை கருவேல மரம் வளர்ந்த, தரிசாக கிடந்த, கடந்தாண்டு பயிரிடப்பட்ட வயல்களை சீரமைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் பெய்த மழைக்கு வயல்களில் ஈரப்பதம் இருப்பதால் உழவு பணிகளையும் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, தொடர்ச்சியாக கடந்த 6 வருடங்களாக வறட்சியால் விவசாயம் பொய்த்து போய் வருகிறது. இந்நிலையில் தேசிய பயிர்காப்பீடு திட்டத்தில் பிரீமியம் செலுத்தப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை மாவட்ட நிர்வாகம் பெற்று தந்துள்ளது. இதனால் இழப்பீடு தொகையை விவசாயத்திற்கு பயன்படும் விதமாக, தரிசான வயற்காடுகளில் சீமை கருவேலங்களை அகற்றுதல், பழைய காய்ந்த செடி, கொடிகள், நெல் தாழை போன்றவற்றை தீயிட்டு கொழுத்துதல் உள்ளிட்ட சீரமைப்பு பணிகளை செய்து வருகிறோம். சீரமைத்த பின், உழவு ஏர் மாடுகள், டிராக்டரை கொண்டு கோடை உழவும் செய்கிறோம். விவசாய நிலங்களில் தற்போது உழவு மேற்கொண்டால், பருவமழை காலங்களில் பெய்யும் மழைநீர் வீணாகாமல் விவசாய நிலத்தில் சேமிக்கலாம். மண்ணின் தன்மை மாறி காற்றோட்டம் ஏற்படும். நுண்ணுயிர்களின் வளர்ச்சி அதிகரிக்கும். மண்ணில் புதைந்து கிடக்கும் பூச்சி முட்டை அழிக்கப்படும். களை செடிகளின் விதைகளும் அழிக்கப்படும். இதனால் வருகின்ற பருவ கால விவசாயத்திற்கு நன்மைகள் ஏற்படும். எனவே செலவானாலும் கவலைபடாமல் உழவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை