×

வருமானமின்றி வறுமையில் வாடுகிறோம் அரசு உதவ அர்ச்சகர்கள் வலியுறுத்தல்

சாயல்குடி, ஜூலை 18:  குறைந்த சம்பளத்தில் குடும்பத்தை வழி நடத்த முடியாமலும், மாற்றுத்தொழிலுக்கு செல்ல முடியாமலும், வறுமையில் வாடி வருவதாக இந்து அறநிலையத் துறை கோயில்களில் பணியாற்றி வரும் அர்ச்சகர்கள் கூறுகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை மற்றும் ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம் கட்டுப்பாட்டின் கீழ் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், உத்திரகோசமங்கை மரகத நடராஜர், மங்களநாதர், திருப்புல்லானி ஆதிஜெகநாதர் கோயில் உள்ளிட்ட சுமார் 56 கோயில்கள் உள்ளன. சாயல்குடி பகுதியில் மாரியூர் பூவேந்தியநாதர் கோயில், சாயல்குடி கைலாசநாதர் கோயில், டி.எம்.கோட்டை செஞ்சடைநாதர் கோயில் உள்ளிட்டவை மாவட்டத்தின் பழங்கால கோயில்களாக உள்ளன. இவைகளில் நாள் ஒன்றிக்கு மூன்று காலம் முதல் ஐந்து காலம் வரை பூஜைகள் நடந்து வருகிறது. மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.1,200 வழங்கப்பட்டு வருகிறது. இதனை கொண்டு குடும்பத்தை நடத்த முடியாமலும், மாற்றுத்தொழிலுக்கு செல்ல நேரம் இல்லாததால் போதிய வருமானமின்றி வறுமையில் வாடி வருவதாகவும் கூறுகின்றனர். எனவே அரசு வழங்கி வந்த சலுகைகளை மீண்டும் வழங்கி, சம்பளத்தை உயர்த்தி தரவும் அர்ச்சகர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அர்ச்சகர் ஒருவர் கூறும்போது. தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு கடந்த ஆண்டுகளில் போதிய சம்பளம் மற்றும் உணவுபடி மற்றும் ஆலய பராமரிப்பு பணம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அனைத்து சலுகைகளும் நிறுத்தப்பட்டு, சொற்ப சம்பளம் ரூ.1,200 மட்டுமே வழங்கப்படுகிறது. இதனை கொண்டு வீட்டு வாடகை கொடுக்க முடியாமலும், குழந்தைகளில் கல்வி செலவுகள், அவசர குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம் என்றார்.


Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை